ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வக்குமார சின்னையனை ஆதரித்து, காங்கயம் அருகே, பரஞ்சேர்வழி நால்ரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் உள்ள மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும், காங்கிரஸ் கூட்டணி அரசில் பங்கேற்று மக்கள் விரோத ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இது, மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல. மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்கப் போகும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலமாக நாட்டில் நடைபெறும் குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மத்தியில் மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, அதிமுக அங்கம் பெறும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போதுதான், தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
காவிரி நீரில் நமக்குள்ள பங்கைத் தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதி ஆணை 2007-ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது. அப்போது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் இருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை. அதை வெளியிட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. 2004, 2006, 2009-ஆம் ஆண்டுகளில் தமிழக மக்கள் அளித்த வாக்குக்கு, திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்த துரோகம் இது. இதற்காக அந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
உச்ச நீதிமன்றம் வரை சென்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நான் நடவடிக்கை எடுத்தேன். இந்த ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமக்குரிய தண்ணீரை கர்நாடகம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
ஆனால், அதை அமைக்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. எனவே, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி அமையும்போது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியன அமைக்கப்படும்.
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், சிறைபிடிப்புகளுக்கும், தமிழக மீனவர்கள் அடிக்கடி ஆட்படுத்தப்படுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் அதிமுக அரசின் உத்தரவின் பேரில், தமிழக-இலங்கை மீனவர்கள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை 27.1.2014-இல், சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை கொழும்புவில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளும் வகையில், தற்போது இலங்கை சிறையில் உள்ள 177 தமிழக மீனவர்களையும், 44 படகுகளையும் கண்டிப்பாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.
என்னுடைய தொடர் வற்புறுத்தல் மற்றும் நிபந்தனை காரணமாக இலங்கை அரசு 116 மீனவர்களையும், 26 படகுகளையும் நேற்று விடுவித்துள்ளது. இன்னமும் 61 மீனவர்களும், 18 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த 61 மீனவர்களையும், 18 படகுகளையும் விடுவித்தால் தான் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கும் வகையில் தமிழக இலங்கை மீனவர்களுக்கு இடையேயான அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைக்கான தேதியை மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது தீவிர முயற்சியின் காரணமாக, அனைத்து மீனவர்களும் இன்னும் ஓரிரு நாள்களில் விடுவிக்கப்படுவார்கள். அதன் பின், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் நாள் முடிவு செய்யப்படும் என்றார்.
அடடா! இத்தனை ஆண்டுகள் மீனவர்கள் மீது வராத அக்கறை இப்போது தான் அம்மாவுக்கு வந்திருக்கிறது! இப்போதே இந்தியாவின் பிரதமர் போன்று பேச ஆரம்பித்துவிட்டார்!