தமிழக மீனவர்கள் தொடர் விடுதலை: இலங்கையுடன் பேச்சு நடத்த தமிழக அரசு சம்மதம்

jaya2முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கைச் சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து, இலங்கை மீனவர்களுடன் கொழும்பில் வரும் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனை மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு, கடிதம் மூலம் தமிழக அரசின் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தின் விவரம்:

இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று இரு நாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக தங்களுக்கும் (சுசித்ரா துரை) தமிழக அரசின் சார்பில் விரிவாக கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அதில், இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படுவதைப் பொருத்தே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 13-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பு வரை, தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

முதல்வர் நடவடிக்கை: இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையாலும், வலியுறுத்தலாலும் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 116 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 26 படகுகளும் கடந்த புதன்கிழமை (மார்ச் 12) விடுவிக்கப்பட்டன. ஆனாலும், 61 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 18 படகுகளை இலங்கை விடுவிக்கவில்லை. இதனால், திட்டமிட்டபடி மார்ச் 13 ஆம் தேதியன்று இருநாட்டு மீனவ சங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அந்த நாட்டு நீதிமன்றங்கள் விடுவித்து வருகின்றன. இதேபோன்று, தமிழகத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் 18 படகுகளை மாநில அரசு விடுவித்துள்ளது.

வரும் 25-ஆம் தேதிக்கு சம்மதம்: மீனவர்கள் விடுவிப்பைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தையை நடத்த இலங்கை தரப்பில் ஒத்துக் கொண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை தமிழக அரசுக்கு தாங்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளீர்கள். மீனவர்கள் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மார்ச் 25 ஆம் தேதியன்று கொழும்பில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான சந்திப்பை நடத்தலாம். இநதத் தகவலை இலங்கைக்குத் தெரிவிக்க வேண்டும் என கடிதத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TAGS: