அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை: இலங்கை

fishermen_exchangeஇலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இருநாட்டு மீனவர்களுக்கிடையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக, இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காகவே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அந்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

25ஆம் திகதி நடைபெறவுள்ள மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது தாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பினருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடிப்பது தொடர்பில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் தொடர்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுக்களையடுத்து, இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இம்மாதம் 13 ஆம் திகதி நடபெறும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது,

ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிபந்தனை விதித்திருந்தார்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு முதல்நாள், 116 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், இந்திய தரப்பினர் குறித்த திகதியில் பேச்சுக்களில் கலந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்து, வேறு ஒரு திகதிக்கு பேச்சுக்களை ஒத்தி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 25 ஆம் திகதி இந்தப் பேச்சுக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. -BBC

TAGS: