நெருக்கடியில் கருணாநிதி: மு.க.அழகிரி

azhakiri1கருணாநிதியைச் சுற்றியுள்ள துரோகிகளிடமிருந்து அவரையும் திமுகவையும் காப்பாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும் மதுரை மக்களவை உறுப்பினருமான மு.க. அழகிரி கூறினார்.

திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து, மு.க.அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திமுக வேட்பாளர்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த அழகிரி, பணம் கொடுத்தவர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை தில்லியில் சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்தார். இவை மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.

மதுரையில் திங்கள்கிழமை நடைபெறும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் அடுத்தக்கட்ட முடிவு அறிவிக்கப்படும் என்றும் அழகிரி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள், அழகிரி தனிக் கட்சி துவக்கம் குறித்து அறிவிப்பை வெளியிடப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது.

மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அழகிரிக்குச் சொந்தமான தயா மகால் திருமண மண்டபத்தில் ஆதரவாளர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணியில் இருந்தே ஆதரவாளர்கள் வரத் துவங்கினர். காலை 10.50-க்கு அழகிரி மண்டபத்துக்கு வந்தார். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் பேசியது:

எனது ஆதரவாளர்கள் முதலில் போஸ்டர் அடிப்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் ஒட்டிய போஸ்டர்தான், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம். அந்த போஸ்டரில் என்ன தவறு கண்டு பிடித்தார்கள் எனத் தெரியவில்லை. என் மீதுள்ள அன்பின் காரணமாக, எனது பிறந்த நாளை மதுரையில் பொதுக்குழு கூடுகிறது என போஸ்டரில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதே போல, எனது பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என போஸ்டர் அடித்ததற்காக இருவரை நீக்கியுள்ளனர். ஒரு திரைப்படம் வெளியாகிறது என்று போஸ்டர் அடிப்பதைப் போலத்தானே எனது பேட்டி வருகிறது என்பதும்.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்கட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் கூறினேன். நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி, நான் வெளிநாடு சென்ற நிலையில் புகார் கொடுத்தவர்களையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். அது பற்றி நியாயம் கேட்கச் சென்று, அமைதியாகத்தான் அவரிடம் கேள்வி எழுப்பினேன். இப்படியெல்லாம் பேசினால் உன்னையும் நீக்கிவிடுவேன் என்றார். எனது ஆதரவாளர்களை நீக்கிய பிறகு நானும் நீக்கப்பட்டதாகவே அர்த்தம் எனக் கூறிவிட்டு வந்தேன். நடந்தவை இப்படியிருக்க, மறுநாள் பேட்டியில் முரண்பாடான தகவல்கள் வெளியிடப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திமுக தலைவர் சுயமாக எடுத்த முடிவு அல்ல என்பதால், கட்சிதான் முக்கியம் என முடிவில் இருக்கிறேன். ஆகவே “கலைஞர் திமுக’ என்றெல்லாம் போஸ்டர் அடிக்க வேண்டாம். நாம் இப்போது இருப்பதே கலைஞர் திமுகதானே. கலைஞர்தான் திமுக, திமுக என்றால் கலைஞர்தான்.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி நெருக்கடியில் இருக்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். அவர்களெல்லாம் பதவி சுகத்துக்காக வந்தவர்கள், உண்மையான கட்சிக்காரர்கள் அல்ல, அனைவரும் வியாபாரிகள். திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே இது புரியும். ஏற்கெனவே, கூறியதைப் போல பணம் கொடுத்தவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

கருணாநிதியிடம் மன்னிப்புக் கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தந்தையிடம் மகன் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை, ஆனால், எந்த தவறும் செய்யாதபோது ஏன் கேட்க வேண்டும்? இப்போதும் கூறுகிறேன், ஆதரவாளர்களான நீங்கள் கூறினால், தலைவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; ஆனால் கூடவே இருக்கும் துரோகிகளை மன்னிக்க முடியாது. இப்போதைய சூழலில் கருணாநிதியைச் சுற்றியுள்ள துரோகிகளிடம் இருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும். அடுத்து திமுகவைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

“நரேந்திர மோடி பிரதமர் ஆவதை வரவேற்கிறேன்”

நரேந்திர மோடி பிரதமர் ஆவதை வரவேற்கிறேன் என்று மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“”இந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசுகிறது. அவர் ஒரு சிறந்த நிர்வாகி; அவர் பிரதமர் ஆவதை வரவேற்கிறேன்” என்றார்.

முன்னதாக, ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, நடிகர் கார்த்திக் தன்னைத் தொடர்பு கொண்டு மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட பிரதமரிடம் வலியுறுத்தியதற்கு நன்றி தெரிவித்ததாகக் கூறினார்.

ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி:  மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் சென்னையில் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்த அழகிரி, அந்த சந்திப்பு நெகிழ்ச்சி அளிப்பதாகவும் ரஜினிகாந்த், தன்னை ஒரு சகோதரராகப் பாவித்து பேசியதையும் குறிப்பிட்டார். ரஜினி ரசிகர்கள் எனது ஆதரவாளர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ரஜினிகாந்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அழகிரி.

TAGS: