புதுடில்லி: காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என கூறிய பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, காங்.,மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் போட்டியிட மறுத்து வருவதாக கூறினார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனது இணையதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தோல்வியடைவோம் என்ற பயத்தில் உள்ள காங்., தலைவர்கள் தேர்தலில் போட்டியிட மறுப்பதுடன், மூழ்கும் கப்பலிலிருந்து விலகி வருகின்றனர். சிலர் போட்டியிட மறுக்கின்றனர். பலர் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கட்சி சிக்கலாக உள்ள நிலையில், தனது கட்சியின் கோட்பாட்டை பின்பற்ற முடிவு செய்தள்ளதார். தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நகைச்சுவையானவை எனவும், தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் எனவும் ராகுல் கருதுகிறார். இதை உண்மை என ராகுலும், காங்., கட்சியினரும் நினைத்தால், அவர்கள் நிகழ் காலத்திலிருந்து விலகி உள்ளனர் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
கடந்த காலங்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும், தற்போது விலகியுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் ஒரு இலக்கமாக மாறியுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரசை ஆதரிக்க சந்திரசேகர ராவ் மறுக்கிறார். தமிழகம் மற்றும் ஆந்திராவில் பா.ஜ., வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தலை காங்கிரஸ் கட்சி, கொள்கை, வலிமையான கூட்டணி கட்சி மற்றும் சிறந்த தலைவர் இல்லாமல் எதிர்கொள்கிறது. அனைத்தும் தவறாக நடந்தால், முடிவுகளும், அவர்களும் தவறான வழியில் தான் செல்வார்கள் என கூறினார்.