ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி தொகுதியில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சு.ப. உதயகுமார் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் 7வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் 26 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இதில் தமிழ்நாட்டில் அக்கட்சியின் சார்பாகப் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சு.ப.உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரை, 1980லிருந்து காங்கிரசின் வசம் இருந்த இந்தத் தொகுதியில் 1999ல் பாரதீய ஜனதாக் கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். 2004ல் சிபிஎம்மின் ஏ.வி. பெல்லார்மின் வெற்றிபெற்றார்.
இடதுசாரி கட்சிகளும் பாரதீய ஜனதாக் கட்சியும் செல்வாக்குடன் இந்தத் தொகுதியில் களம் இறங்கியிருப்பது போட்டியைக் கடுமையாக்கியுள்ளது.
இதேபோல, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் தூத்துக்குடியிலும், திருநெல்வேலி தொகுதியில் ஜேசுராஜனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மத்தியசென்னை, திருப்பூர், புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவர்கள், பத்திரிகையாளர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றனர். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் குழந்தைகள் உரிமைப் போராளியான நினா பி. நாயக், எர்ணாகுளத்தில் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. -BBC