உத்தரப்பிரேதச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று நான் கூறியது விளம்பரத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல. வாராணசி தொகுதியில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உறுதிபட தெரிவித்தார்.
இந்த தேர்தலில் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. நரேந்திர மோடியை எதிர்த்து இத் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. நானும் அதற்கு தயாராக இருக்கிறேன்.
எனினும் இது குறித்து வாராணசி மக்களின் கருத்தைக் கேட்க நான் விரும்புகிறேன். அவர்கள் போட்டியிடச் சொன்னால் மோடியை எதிர்த்துப் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் சிறுபான்மையினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். இதில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பிரசாந்த் பூஷண், கோபால் ராய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசியதாவது: சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் மோடியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பது விளம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் என்பது போல் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
உண்மையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதற்காக மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதாக நான் சொல்லவில்லை. பதவிக்காகவோ அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவோ நான் அப்படிச் சொல்லவில்லை. நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுவது என்பது சாதாரண காரியமல்ல; அது மிகப்பெரும் சவால் நிறைந்தது என்பது எனக்குத் தெரியும். எனது ஒரே குறிக்கோள் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.
அரசியலில் எல்லா கட்சிகளும் ஒன்றுதான். ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதும், வகுப்புவாத அரசியல் நடத்துவதும் அவர்களுக்கு வாடிக்கை. இதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் விதிவிலக்கல்ல. தேர்தலில் இக்கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
எத்தனைப் பேரை தோற்கடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்களைத் தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும் தோல்வியுறவேண்டும்.
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால் அவரை எதிர்த்து களம் இறங்க குமார் விஸ்வாஸ் தயாராக இருக்கிறார். இதற்காக அவர் கடந்த மூன்று மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளார். தேர்தலில் அவரை சந்திக்க தைரியமில்லாத சிலர் அவரை தாக்கி வருகின்றனர். ஆனால் அவர் இதற்கெல்லாம் அஞ்சாமல் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
நரேந்திர மோடிக்கு வாக்களித்தால் நிலையான ஆட்சி தருவார் என்று பா.ஜ.க. கூறிவருகிறது. அப்படிப்பார்த்தால் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்திரமாகத்தானே இருந்தார்.
ஆட்சி ஸ்திரமானதா இல்லையா என்பது முக்கியமல்ல; மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு தரும், நீதி கிடைக்கச் செய்யும் ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். நிலையான ஆட்சியைத் தருவதாகக் கூறிக்கொண்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்தபின் ஊழல், முறைகேடுகளிலும் வகுப்புவாத அரசியலிலும்ó ஈடுபடுவதுதே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊழலும் வகுப்புவாதமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தேசியக் கட்சிகள் ஏதாவது பிரச்னையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வகுப்பு மோதல்களைத் தூண்டி விடுகின்றன. இந்த மோதல்களினால் உயிரிழக்கப்போவது அரசியல் தலைவர்களோ அல்லது அவர்கள் வீட்டினரோ அல்ல; அப்பாவி மக்கள்தான் இதற்கு பலியாகின்றனர்.
பாதுகாப்பும், நீதியும், சமத்துவமும் கொண்ட இந்தியாவைத் தான் மக்கள் விரும்புகின்றனர். அதற்காகத்தான் எங்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. எல்லா கட்சியினரும் வளர்ச்சியைப் பற்றி பேசிவருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பும், நீதியும் கிடைக்காமல் வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்?
குஜராத் கலவரத்துக்கு பா.ஜ.க. காரணம். இதேபோல சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு காங்கிரஸ் காரணம். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 102 கலவரங்கள் நடந்துள்ளன. அகிலேஷ் ஆட்சியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல், சுகாதார திட்டத்தில் ஊழல், சத்துணவு ஊழல் என பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் பெருகிவிட்டன.
தேர்தல் நெருங்கும்போது கலவரத்தைத் தூண்டிவிடுவது இந்த அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. கலவரம் முடிந்ததும் ஹிந்துக்கள் பா.ஜ.க.விலும், முஸ்லிம்கள் காங்கிரஸ் அல்லது சமாஜவாதி கட்சியிலும் ஐக்கியமாகிவிடுகின்றனர்.
இன்றுவரை காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கோ, பா.ஜ.க. ஹிந்துக்களுக்கோ எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை. கலவரத்தைத் தூண்டியவர்களே அது தொடர்பான விசாரணையை நடத்தி தாங்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்துக்கொள்கின்றனர். வாக்கு வங்கி அரசியலுக்காக இப்படிச் செய்கின்றனர். இவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார் கேஜ்ரிவால்.