மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே 25ம் திகதி பேச்சுவார்த்தை: ஜெயலலிதா

Jayalalithaa_pointing_fingerஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 74 பேரும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே திட்டமிட்டபடி எதிர்வரும் 25ம் திகதி இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த விடயத்தை வலியுறுத்திய கடிதம் ஒன்றை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தின் படி, தற்போது இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பவில்லை என்பது புலனாகிறது.

இந்த நிலையில் கைதாகியுள்ள அனைத்து மீனவர்களும், அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

 

தமிழக மீனவர்களுக்கு பாரம்பரிய கடல் பிரதேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை?- அமைச்சர் ராஜித

rajitha_senarathneஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரிய கடல் பிரதேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

1974 ல் இலங்கை சர்வதேச கடல் எல்லை உடன்படிக்கையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்றொழில் பிரதேசம் என்று கூறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்றனர்.

இதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் 25ம் திகதி பேச்சுவார்த்தை நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்கள் அவர்களது வள்ளங்களுடன் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வள்ளங்களுடன் விடுதலை செய்தோம்.

ஆனால் இனிமேலும் அவர்கள் வருவதாக இருந்தால் வள்ளங்களை ஒப்படைப்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் நடக்க விருக்கும் பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இந்திய மத்திய அரசுக்கும் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

TAGS: