பாஜக கூட்டணியில் சுமுக உடன்பாடு

  • சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங். உடன் (இடமிருந்து) இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்.
    சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங். உடன் (இடமிருந்து) இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்.

 

தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடந்த சில நாள்களாக நீடித்து வந்த தொகுதி பிரச்னை முடிவுக்கு வந்து வியாழக்கிழமை சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 20) அறிவித்தார்.

பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7,

இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 1 என தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேயில் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் வென்று ஆட்சியமைக்க இந்தக் கூட்டணி உதவும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோருடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில்

பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ், வைகோ, பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தொகுதிகளை ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தது எப்படி? கடந்த 2013 செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக இளைஞரணி மாநாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் உற்சாகமடைந்த பாஜக தலைவர்கள், தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சென்னை வந்த ராஜ்நாத் சிங்கை, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரைச் சந்தித்த தமிழருவி மணியன் பாஜக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

அதன் பிறகு பாஜக தலைவர்கள் முரளிதரராவ், பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எஸ். மோகன்ராஜூலு ஆகியோர் விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்.கே. சுதீஷ், ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, வைகோ ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

ராஜ்நாத் சிங்கை தில்லியில் வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்றார். அதற்குள் கூட்டணியை முடித்து மோடியுடன் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரை மேடையேற்ற பாஜக திட்டமிட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இழுபறி: அதன் பிறகு மார்ச் 7-ஆம் தேதி தேமுதிக, பாமகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கியது. ஒரு வழியாக தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்த பாஜக, எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்ய முடியாமல் தவித்தது. திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி போன்ற தொகுதிகளை தேமுதிகவும், பாமகவும் பிடிவாதமாகக் கேட்டதால் சிக்கல் ஏற்பட்டது.

உடன்பாடு ஏற்படாத நிலையில் மார்ச் 14-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. திருப்பூர் தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்தார்.

மார்ச் 16-ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சிங்கத்துக்கு சிறுநரிகள் பிச்சை போட முடியாது என பேசினார். புதிதாக சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்தார்.

இதனால் கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து தேமுதிக, பாமக, மதிமுகவுடன் பேச்சு நடத்தி தொகுதி உடன்பாட்டை பாஜக சுமுகமாக முடித்துள்ளது. இதன் மூலம் கடந்த 5 மாதங்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

 

“தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி”

நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்திருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். இந்தியாவில் முதல் முறையாக பல்வேறு கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது வாஜ்பாய் அரசுதான்.

சுதந்திர இந்தியாவில் மிகச் சிறப்பான ஆட்சியை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியது. 6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன.

ஆனால், கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்குக் கூட வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசின் தவறான செயல்பாடுகளால் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது.

இந்த நிலையை மாற்றி நாட்டை முன்னேற்றப் பாதைக்குச் செல்ல நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புகின்றனர். அதனால் அவரை பிரதமராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

மத்தியில் நரேந்திர மோடி பிரதமரானால், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

TAGS: