இந்தியப் பொருளாதாரம் சீர்குலைய சிதம்பரம்தான் காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

jayalalitha2இந்தியப் பொருளாதாரத்தின் சீர்குலைவுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம் என தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

இந்தத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட காரைக்குடியில் வெள்ளிக்கிழமை வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்துள்ளது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இந்திய பொருளாதாரம் அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ளது. இதற்கு நிதியமைச்சர் ப.சிதம்பரமே காரணம்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் திட்டச் செலவினங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவதுபோல் ஒதுக்கிவிட்டு, பின்னர் திருத்திய மதிப்பீட்டில் கணிசமாக குறைப்பதை வாடிக்கையாகக் கொண்டவர் ப.சிதம்பரம்.

2013-14ஆம் நிதியாண்டில் திட்ட செலவுக்கான மதிப்பீட்டுகளுடன் திருத்திய மதிப்பீட்டினை ஒப்பிடும்போது 14.5 சதவீத நிதியைக் குறைத்துள்ளார். மாநிலங்களுக்காக ஒதுக்கும் நிதியைத் தருவதில்லை. உதாரணமாக, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் 2011-12 ஆம் ஆண்டுக்கு ரூ.1891 கோடியை தமிழகத்திற்கு அனுமதித்துள்ளது.

இதில் 13ஆவது நிதிக் குழு அளித்த ரூ.126 கோடி போக ரூ.1765 கோடியில் 65 சதவீதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும். 35 சதவீதத்தை மாநில அரசு அளிக்கும். ரூ.428 கோடியை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை. 2012-13 ஆம் ஆண்டுக்கான ரூ.439 கோடியும், 2013-14 ஆம் ஆண்டுக்கான ரூ.17.38 கோடியும் மத்திய அரசிடமிருந்து வர வேண்டும். இதுவரை இத்தொகை வரவில்லை.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக மாநில மன்றத்தின் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தொகையில் 2012-13ஆம் ஆண்டில் ரூ.5.56 கோடி இதுவரை வரவில்லை. இதேபோன்று 2012-13ஆம் ஆண்டில் ரூ.11.27 கோடி இன்னமும் வரப் பெறவில்லை. இந்த 2 திட்டங்களின் கீழ் மட்டும் ரூ.976 கோடி வரவேண்டியுள்ளது.

13ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி 2 ஆண்டுகளுக்கு சாலை பராமரிப்புக்காக ரூ.931 கோடி வழங்க வேண்டும். மாநில அரசின் பங்கைத் தராமல் மத்திய அரசு காலம் தாழ்த்தினால், எப்படி தமிழக அரசு செயல்பட முடியும்.

தென் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியப் பகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொழில் வளர்ச்சி பெறும் வகையில் இப் பகுதியில் தொழில் பூங்காக்களை உருவாக்கவும், அங்கு தொழில் முனைவோருக்கு கடன் வசதி அளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தொழில் கொள்கை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் எதையும் சிதம்பரம் மேற்கொண்டாரா? மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பதிலும் நிதி ஆதாரங்களைக் குறைப்பதிலும், செலவுகளை மாநில அரசின் மீது திணிப்பதிலும் கை தேர்ந்தவர் ப.சிதம்பரம்.

ஜனநாயகத்தின் நெறிமுறைகளைக் குலைப்பதிலும் வல்லவர் சிதம்பரம். 2009ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றதை அதிமுக ஏற்கவில்லை. மறு வாக்கு எண்ணிக்கைக்கான கோரிக்கையை அவர் ஏன் நிராகரித்தார்?

கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை எதிர்கொள்ள அஞ்சி, அதனை தள்ளுபடி செய்ய மனுவினை சிதம்பரம் தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறுவாக்கு எண்ணிக்கைக்கான மனு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. சிதம்பரத்தின் வெற்றி என்பது மோசடியான ஒன்று. சிதம்பரத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பு வருகிறதோ, இல்லையோ உங்களின் தீர்ப்பு இந்தத் தேர்தலில் வரும் காலம் வந்துவிட்டது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம் இந்த முறை அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை தேர்தலில் நிற்க வைத்துள்ளார். காங். சார்பில் போட்டியிடும் அவரை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் சிதம்பரத்திற்கு உறுதுணையாக இருந்த திமுகவையும் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியவர்களை நீங்கள் வீழ்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

TAGS: