டில்லியில், மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரவிந்த் கெஜ்ரிவாலின், ‘ஆம் ஆத்மி’ கட்சி, வாக்காளர்களை ஏமாற்றியதோடு, ஆட்சியை விட்டும் ஓடியது. தற்போது, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, அசாம் மற்றும் மணிப்பூரில், ஆம் ஆத்மியின் சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகக் கூறி வருவது, வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில், முதல்வர் தருண் கோகாய் மற்றும் மணிப்பூரில், முதல்வர் ஒக்ராம் இபோபி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலங்களில், கடும் கோடை காரணமாக, முக்கிய நதிகள் வறண்டு வருகின்றன. இதனால், அசாம் மற்றும் மணிப்பூரில் வசிக்கும் மக்கள், தங்களின் குடிநீர் தேவைக்காக, தனியார் குடிநீர் நிறுவனங்களையே நம்பியுள்ளனர்.
அதிருப்தி:
மக்களின் அடிப்படை தேவையான குடிநீரையே, அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆட்சியாளர்கள் மீது வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும், ‘ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்ற கோஷத்துடன், லோக்சபா தேர்தலில் களம் இறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள், அசாம் மற்றும் மணிப்பூரில் களம் இறங்கியுள்ளனர்.இம்மாநில மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக, வாக்குறுதிகளை அள்ளி வீசத் துவங்கியுள்ளனர். கட்சியின் தேர்தல் அறிக்கையில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதே முதலிடம் பெற்றுள்ளது.எனினும், ‘அங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை எப்படி பூர்த்தி செய்யவுள்ளனர்? அதற்கான திட்டங்கள் என்ன?’ என்பதை பற்றி, ஆம் ஆத்மி வேட்பாளர்கள், வாய் திறக்கவில்லை.
இதுகுறித்து, வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படும் என, வாக்குறுதி அளித்தனர். ஆனால், எவ்வித திட்டமிடலும் இல்லாததால், அவர்களால் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், 49 நாட்களில், ஆட்சியை காலி செய்து விட்டு ஓடினர்.
திணறல்:
தற்போது, வடகிழக்கு மாநிலங்களிலும் இதே வாக்குறுதிகளை அள்ளிவிடும் ஆம் ஆத்மி கட்சியினர், பிரச்னைக்கு எவ்வகையில் தீர்வு காணவுள்ளனர் என்பதை அறிவிக்காமல் திணறுவதால், வாக்காளர்கள் இவர்களை நம்புவதாக இல்லை.எனவே, அசாம் மற்றும் மணிப்பூரில், ஆம் ஆத்மியின் பிரசாரம் எடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.