கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு என்ன காரணம்?

5thankarகர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இங்குவாழும் தமிழர்கள் தான் காரணம் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்தார்.

கர்நாடகத் தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்.விளையாட்டுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:

மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்கள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.10 நிமிடங்கள் சரளமாக தமிழ் பேசும் நிலையில் தமிழர்கள் இல்லை. 1.10 கோடி தமிழ்க்குழந்தைகள் படிக்கும் தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளிகள் இல்லை.

ஆனால் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 472 தமிழ்ப்பள்ளிகளை நடத்திவருகிறார்கள். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்மொழியை மறக்கக்கூடாது. நமது மொழி தான் தமிழர்களின் அடையாளமாகும். கர்நாடகத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தமிழ்மொழி மீது தீராத அன்பும், பற்றும் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு கன்னடர்களோ, கர்நாடக அரசோ அல்ல, கர்நாடக தமிழர்கள் தான் காரணம். நமது குழந்தைகளை தமிழ் கற்க அனுப்பினால் தானே தமிழ்ப்பள்ளிகளை நடத்த முடியும் என்ற நிதர்சனத்தை தமிழர்கள் உணர வேண்டும். தாய்மொழியில் கற்று தேர்ந்தவர்கள் தான் உலகம்போற்றும் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்.

தமிழக அரசியலில் 25 சதம்பேர் தமிழர்கள் அல்லாதவர்கள் கோலோச்சுகிறார்கள்.சாதி, மதங்களால் பிளவுப்பட்டிருப்பதே இதற்கு காரணம். கர்நாடக அரசியலில் தமிழர்களால் மிளிரமுடியாமைக்கும் கர்நாடகதமிழர்கள் காரணம். நமது தலைவன் யார் என்று தெரியாமல் அரசியல் உரிமைகளை எப்படிவென்றெடுக்க முடியும் இதில் கன்னடர்களை குறைக்கூறுவதைவிடுத்து, கர்நாடகத்தில் உள்ள கட்சிகளில் இணைந்து தமிழர்கள் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் நாளடைவில் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களாக வாழுங்கள், இங்குள்ள மக்களோடு தோழமையோடு வாழ பழகுங்கள் என்றார் அவர். விழாவில் திரைப்பட இயக்குநர் வி.சேகர், கூட்டமைப்பு நிறுவனர் பி.வி.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

TAGS: