தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம்!

nowaterசென்னை: தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதே இந்தநிலை என்றால் கடும் கோடை ஏப்ரல், மே மாதங்களில் வாய் நனைக்கக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பஞ்சம் இந்த ஆண்டு இப்போதே தலை தூக்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆறுகள், ஏரிகள் வற்றிப் போய் விட்டன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் அல்லல் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 912 செமீ மழை பெய்ய வேண்டும். வானிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் 2012ல் சராசரி அளவை காட்டிலும் 15 சதவீதம் குறைவாகவும், கடந்தாண்டு வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாகவும் மழை பெய்தது. இதனால், தமிழகத்தில் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வைகை, பாபநாசம், சாத்தனூர், ஆழியாறு, மணிமுத்தாறு, மேட்டூர், பவானிசாகர், அமராவதி உட்பட 89 அணைகளும், பூண்டி, சோழவரம், வீராணம் உட்பட 13 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் போதிய தண்ணீரின்றி குறைந்து காணப்படுகிறது.

வணிக நிறுவனங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சுவதாலும் திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், மதுரை, விழுப்புரம், கடலூர் உட்பட தமிழக முழுவதும் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்தாண்டை காட்டிலும் 20 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி விவசாயம் மேற்கொள்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்போதே பல இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதிலும் பல குளறுபடி. சென்னை அடுத்த மாதவரம் பகுதிகளில் குடிநீரை மக்கள் பார்த்தே பல காலம் ஆகிவிட்டது. இதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரத்திற்கு பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், வாரம் ஒரு முறைதான் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை ஆகிறது. இதனால் லாரி தண்ணீர் எப்போது வரும் என்று காஞ்சி மக்கள் காய்ந்துபோய் காத்திருக்கின்றனர். லாரி வரும்போது இல்லாவிட்டால் தண்ணீர் கிடைக்காத நிலை.

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டங்களில் தினமும் 3 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் வரை பால் வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு லாரி மற்றும் வேன்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் மட்டுமல்லாமல் கிணறுகள், போர்வெல் ஆகிறவற்றிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்கவில்லை. மாடுகளுக்கு, உணவு பயிர்கள் கிடைக்கவில்லை. இதனால், பசுமாடுகள் வழக்கத்தைவிட, குறைந்த அளவே பால் கொடுக்கின்றன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆவின் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 2 நாட்களாக வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே வருகிறது.
ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சி காந்தி நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். தினமும் செல்வதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் தண்ணீர் தர மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டினர். சேலம் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை. குறிப்பாக சேலம் மாநகர பகுதியில் 11லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மேட்டூரை நம்பி இருக்கிறார்கள். இப்போது, 15நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்த நீர்நிலைகளில் பெரும்பாலானவை தற்போது கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 50 சதவீதம், ஆக்கிரமிப்புகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையம் சேலம் மண்டலத்தில் ராசிபுரம், ஆத்தூர் தெற்கு, கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, தலைவாசல், வீரபாண்டி பகுதிகள் நிலத்தடி நீர் ஒழுங்கு முறைக்காக எச்சரிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவால் புதிய போர்வெல்கள் அமைக்க சிரமங்கள் உள்ளது. அதே நேரத்தில் 2 வருடத்திற்கு முன்பு 300 அடியில் கிடைத்த நீர், தற்போது 800 அடிக்கு தோண்டினாலும் கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு நிலத்தடி நீர் அபாய நிலையில் உள்ளது. கோவை மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 10 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதுடன் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவிக்க உள்ளதாக கூறினர்.
திருச்சியில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். திருச்சி மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை என்பது செயற்கையாக அதிகாரிகளால் ஏற்படுத்தப்படும் பிரச்னைதான்.

பணிகளை சரியாக முடிக்காமல் அவசரகதியில் திட்டங்களை திறந்ததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் குடிநீர் கலங்கலாகவே வருகிறது.
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வைகை, குண்டாற்றில் குழி தோண்டி மண் கலந்த நீரை அகப்பையில் முகந்து வடி கட்டி குடிக்கின்றனர். மதுரையில், தற்போது 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை ஆகிறது. ஏப்ரலில் வழங்க அணையில் தண்ணீர் இருப்பு இல்லை. வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இந்த ஆற்றில் 6 மாவட்டங்களுக்கு 106 கூட்டு குடிநீர் திட்ட ஆதார கிணறுகள் உள்ளன. இதில் தண்ணீர் வற்றி குடிநீர் பஞ்சம் தலை தூக்கி உள்ளது. மதுரை நகரில் நிலத்தடி நீர் அதிகபட்சமாக 1000 அடி வரை இறங்கி, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் கீழே இறங்கி வருகிறது. குடிநீர் கானல் நீராக உள்ளது. ராமநாதபுரத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் திட்டம் இல்லாத பகுதிகளில் கடும் பாதிப்பு உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்து உள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் நகராட்சி பகுதிகள் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கிராமங்களை இணைக்கும் 2வது குடிநீர் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. ஒரு குடம் லாரி தண்ணீரை ரூ.4வரை விலை கொடுத்து வாங்கி கிராமங்களில் சமாளிக்கின்றனர். காவிரி, ஆத்தூர் அணை குடிநீர் திட்டங்கள் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. ஆனாலும் இங்கு போதிய குடிநீர் பெறப்படாததால், தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடம், டிரம்களில் பிடித்து வைத்து மக்கள் எப்படியோ சமாளிக்கின்றனர். இப்பிரச்னையை தீர்க்க வைகை அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் அறிவிப்புடனேயே நிற்கிறது. தேனிக்கு முல்லை பெரியாறு, பனசலாற்றில் ஏராளமான உறை கிணறுகள் அமைத்து தண்ணீர் பெறப்பட்டது.

தற்போது இந்த ஆற்றில் தண்ணீரை இல்லாதால் கிணறுகள் வற்றிவிட்டதால் தேனி நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கேன் தண்ணீரை விலைக்கு வாங்கி மக்கள் சமாளிக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள பல உறைகிணறுகளில் போதுமான தண்ணீர் இல்லை. நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், பணகுடி, சிவகிரி, அம்பாசமுத்திரம், வி.கே.புரம், நெல்லை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாரம் ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான கொக்கிரகுளம், வண்ணார்பேட்டையிலும் 4 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.

அணைகளின் நீர்மட்டமும் குறைந்த அளவே காணப்படுவதால் வறண்டு காட்சியளிக்கின்றன. குளங்களில் தண்ணீர் இல்லாத ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடும் வறட்சி நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் தலை தூக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பஞ்சம் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் தூர்வாரப்பட்டிருந்தால் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கோடையை சமாளிக்கலாம். இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத வகையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

TAGS: