இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்த இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் தெஹ்சீன் அக்தரை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்ததாக தில்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், அஜ்மீர் ஆகிய நகரங்களில் கைதான பயங்கரவாதிகள் ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ், முகம்மது மஹ்ரூப், ஷாகிப் அன்சாரி காலித், முகம்மது வகர் அசார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, தெஹ்சீன் அக்தர் சிக்கியுள்ளார். பிகார் மாநிலத்தில் இந்திய எல்லை வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, மத்திய உளவுத் துறையும் தில்லி போலீஸின் தனிப் படையினரும் சேர்ந்து தெஹ்சீன் அக்தரை கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.
மூன்றாண்டு வேட்டை: மும்பை, வாராணசி, ஹைதராபாத், தில்லி உள்ளிட்ட நகரங்களில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கம் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தெஹ்சீன் அக்தர் மூளையாகச் செயல்பட்டதாக தில்லி போலீஸார் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து தேடி வந்தனர்.