தமிழநாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு வழமையாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கியுள்ளனர்.
இதில் பாம்பனை சேர்ந்த மீனவர் அந்தோனி என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர் அந்தோனிக்கு இராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், இலங்கை கடற்படையினர் மற்ற மீனவர்களையும் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததால் அவர்களும் இன்று அதிகாலை கரைக்கு திரும்பிவிட்டனர்.
இதில் இராமேஸ்வரம் மீனவர்களின் 4 விசைப் படகுகளையும், அதில் சென்ற 24 மீனவர்களையும் இலங்கை கடற்டையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற நாகபட்டினம், தஞ்சாவூர் மற்றும் இராமேஸ்வரம் மீனவர்கள் 74 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், நேற்று நடைபெற இருந்த இந்திய – இலங்கை மீனவர்களிடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்பட்டிருப்பதால், இருநாட்டு மீனவர்கள் இடையேயான பிரச்சினைக்கு இப்போதைக்கு தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக மீனவ பிரதிநிதிகள் கூறுகின்றனர்.