தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும்! கி.வீரமணி அறிக்கை!

veeramani1300ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2009இல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது. இலங்கை அரசு! உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மாத்திரம் அல்ல; மனிதநேயம் உள்ளவர்களை, மனித உரிமை பேணுபவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொந்த நாட்டு மக்கள்மீதே யுத்தம்!

சொந்த நாட்டு மக்கள்மீதே யுத்தத்தை நடத்திய கொடுமை! யுத்தம் நடத்தி முடிக்கப்பட்ட பிறகும்கூட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள்.

உலகம் முழுவதும் இதனை எதிர்த்துக் கடுமையாக குரல்கள் வெடித்துக் கிளம்பின. தமிழ்நாட்டிலும் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். பல்வேறு அமைப்புகளும் அவரவர்களுக்குத் தோன்றிய முறைகளில் போராட்டங்களை நடத்தின என்றாலும் கலைஞர் தலைமையில் ‘டெசோ’ அமைப்பு மீண்டும் முகிழ்த்தெழுந்து இந்தப் பிரச்சினையில் உலகத் தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

‘டெசோ’ மாநாட்டின் பெரும் தாக்கம்!

குறிப்பாக சென்னையில் ‘டெசோ’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் காப்பு மாநாடு (12.8.2012) ஏற்படுத்திய உணர்ச்சி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தப் பிரச்சினையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உலகின் பல்வேறு  நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பங்கு கொண்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தனர் அம்மாநாட்டில்.

‘டெசோ’ தீர்மானங்கள் அய்.நா.வில்

அம்மாநாட்டுத் தீர்மானங்கள் பிரதமரிடம் நேரில் அளிக்கப்பட்டன. அய்.நா.வுக்கும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிற்கும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் நேரில் சென்று தீர்மானங்களின் நோக்கத்தை விளக்கினர்.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதர்களையும் சந்தித்து ‘டெசோ’ மாநாட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு ஆதரவு கோரினோம்.

ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் பட்டது

‘டெசோ’ தீர்மானங்கள்

‘டெசோ’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் முக்கியமானவை:

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும்கூட குண்டுகள் வீசப்பட்ட குரூரம், கொடூரம் உலகில் வேறெந்தப் போரிலும் நடைபெற்றிராத அரச பயங்கரவாதம் என்றே கூற வேண்டும். அந்தப் போர்க் குற்றங்கள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. இத்தகவல்கள் அனைத்தையும் அய்.நா. அவைப் பொதுச் செயலாளர் பான்கீமூன் அவர்களால் அமைக்கப் பெற்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 2011 ஏப்ரலில் பான்கீமூன் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும் அங்கு நடந்த போர்க் குற்றங்களை ஆராய்வதற்கும் சுயேச்சையான சர்வதேசக் குழு அமைக்கப்பட்டவில்லை. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து நிற்கும் உலகத் தமிழனம் உரத்த குரலில் நீதிகோரும் கட்டத்திற்கு இன்று வந்துள்ளது.

அன்றைய ‘டெசோ’ தீர்மானம் –
இன்றைய அமெரிக்கத் தீர்மானம்

அய்.நா. அவையிலும் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது என்னும் 2012 ஆகஸ்டு 12இல் சென்னையில் ‘டெசோ’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் வேறு சொற்களில்  இப்பொழுது அமெரிக்காவால் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டது. (25.3.2014).

மனித உரிமையின் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் கடந்த 26ஆம் தேதி தனது அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார்.

வாக்கெடுப்பில் 35 நாடுகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் 23 நாடுகள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. 12 நாடுகள் எதிர்த்துள்ளன. தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த 12 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்பது வெட்கப்படத்தக்கது -கண்டிக்கத்தக்கதுமாகும்.

புறக்கணித்தது என்று சொல்லப்பட்டாலும், இது இலங்கையின் போர்க் குற்றங்களுக்குத் துணை போனதாகவே பொருள்படும்.

தி.மு.க.வின் அழுத்தத்தால்..

2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு அவர்களால் கொண்டு வரப்பட்ட (7.2.2013) தீர்மானத்தின்மீது பல மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சரின் பதில் திருப்தி இல்லாத நிலையில் வெளி நடப்புச் செய்தார்கள் திமுக தோழர்கள்.

கலைஞரைத் தேடி வந்த அமைச்சர்கள்

தி.மு.க. முக்கிய முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம்  ஆகியோர் கலைஞரைச் சந்திக்க ஓடோடி வந்தார்கள்.  ‘டெசோ’வின் நிலைப்பாடு உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது –

இவ்வளவு முயற்சிக்குப் பிறகு இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி செய்யத்தான் முடிந்தது. ஆனாலும் அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந்தது என்பதுதான் வருத்தத்திற்குரியது!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது

முக்கியமான முடிவை எடுத்து தி.மு.க.   தலைவர் கலைஞர் அவர்கள் கீழ்க்கண்ட அறிக்கையினை வெளியிட்டார்கள்.

“அய்.நா. மன்றத்திலும், அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்திலும், நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து – அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்டு இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இனவுணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது”

எனவே குதிரை “குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக அமெரிக்காவின்  வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்ட நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அமைச்சரவையிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகிக் கொள்கிறது” – என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார் (19.3.2013).

அன்று வங்காள தேசத்தில் தலையிடவில்லையா?

இலங்கை விஷயத்தில் சர்வதேச விசாரணையைக் கோருவது இன்னொரு நாட்டு உள்விவகாரத்தில் தலையிடுவதாகும் என்று இப்பொழுது இதோபதேசம் செய்யும் இந்தியா – அன்று பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினையில்  தலையிட்டு தானே ஒரு வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுத்தது என்பதை வசதியாக மறந்து விட்டார்களா?

பிரதமர் இந்திராகாந்தி என்ன சொன்னார்?

2011 ஜூலை 25 ஒரு முக்கியமான நாள்! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் மருமகளும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் வங்கதேசத்துக்கு தலைநகரமான டாக்காவுக்குச் சென்றார் – எதற்காகத் தெரியுமா?

ஸ்வதீனாடா சம்மனோனா என்ற வங்கதேசத்தின் மிகப் பெரிய விருதினைப் பெறுவதற்குத்தான் சென்றார்.

அந்த விருது எதற்காக அளிக்கப்பட்டது? வங்கதேசத்தைப் பெறுவதற்கு அன்றைய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி பேருதவி புரிந்ததற்காக அவரின் சார்பில் சோனியா பெற்று வந்தாரே!

இன்னொரு ந;£டான பாகிஸ்தான் நாட்டின் பிரச்சினையில் மூக்கை நுழைத்தபோது – அது இன்னொரு நாட்டு உள்விவகாரமாகத் தெரியவில்லையோ? இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதில் (நிமீஸீஷீநீவீபீமீ) தலையிட்டால் மட்டும் இன்னொரு நாட்டு உள் விவகாரத்தில் தலையிட்டதாகுமா? இது என்ன சந்தர்ப்பவாத ‘‘ஞானோதயம்!’’

இனப்படுகொலை எங்கு நடந்தாலும் இன்னொரு நாடு தலையிடலாம் என்று அய்.நா.வின் ஜெனோசைடு கன்வென்சன் 1949 கூறவில்லையா? இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்று நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதை (16.8.1983) நினைவுபடுத்திக் கொண்டால், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடலாமா கூடாதா என்பதற்கான விடை கிடைக்கும்.

அந்தோ காங்கிரசே!

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இனி எக்காலத்திலும் ஆட்சிக்கு வருவதில்லை, அடிச்சுவடே இல்லாமல் போய் விடுவது  என்று முடிவுரையை எழுதிக் கொண்டு விட்டதே!

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று சொன்னாலே தேசீயத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நினைக்குமட்டும் – அக்கட்சி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் விரோதமானது என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டதே! இது கல்லின் மேல் எழுத்தே!

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

TAGS: