புதுடில்லி: காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனையும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தூக்கில் இருந்து தப்பிய குற்றவாளிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், சைமன், ஆகியோரது கருணை மனு காலதாமதம் செய்யப்பட்டதால், இவர்களது தூக்கு ரத்தானது .தொடர்ந்து இந்த தீர்ப்பை காரணம் காட்டி, ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் புலிகள் அமைப்பை சேர்ந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கும் ரத்து செய்யப்பட்டது. இதனை தமிழ் ஆதரவு அமைப்புகள் பெரும் மகிழ்ச்சியாக கொண்டாடியது.
இந்நிலையில் 1993 ல் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த தேவேந்திர பால்சிங் புல்லர் டில்லி காங்., அலுவலகத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தினான். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர் . இந்த வழக்கில் இவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இவரது கருணை மனு 2003 ல் போடப்பட்டது. தொடர்ந்து 2011ல் மனு தள்ளுபடியானது. இந்த காலதாமதத்தை காட்டி மனைவி நவ்நீத் கவுர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது.
இந்த மனு விசாரணையில், புல்லர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாதிடப்பட்டது. தாமதம், மனநிலை பாதிப்பு என இரு விஷயங்களையும் கருத்தில் கொண்டு புல்லரது தூக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.