புதுடில்லி : நடுத்தர மக்களை கவருவதற்காக வரிச்சலுகைகள், இளைஞர்களை கவர வேலைவாய்ப்பை அதிகரிப்பது, தொழில்துறையை வளர்ச்சி அடைய வைப்பதற்காக தொழல்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை மையப்படுத்தி பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்ய தவறிய பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மிக கவனமாக பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சுமார் 12 கோடி பேர் வரும் லோக்சபா தேர்தலில் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ளனர். இதனால் இவர்களை கவரும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி ஏப்ரல் 3ம் தேதி வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கையை பா.ஜ., தயார் செய்து வருகிறது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பொருளாதார ஆலோசகர்கள் உள்ளிட்டோரிடம் ஆலேசனைகள் நடத்தப்பட்டு, கருத்து கேட்ட பின்னரே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் தேர்தல் விவகாரம் அல்ல:
பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் யஷ்வந்த் சின்கா, பொருளாதார வளர்ச்சியை சரியான பாதையில் எடுத்துச் செல்வதற்காகவும், சாதாரண மக்களை வரி சுமைகளில் இருந்து விடுவிப்பதற்காகவும் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் கவனம் செலுத்தி இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையில் இடும்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கூறிய சின்கா, ராமர் கோயில் என்பது உணர்வு சார்ந்த விஷயம்; அது தேர்தல் விவகாரம் அல்ல; பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு ராமர் கோயில் முக்கிய பங்காற்றி உள்ளது; அயோத்தி விவகாரத்தையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்; ஆனால் அதை மையப்படுத்தவில்லை; நீதித்துறை உத்தரவின் பேரிலோ அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அடிப்படையிலோ அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்; அது கட்சியின் நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும்; இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைப்பதற்காக வருமான வரி செலுத்தும் முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இன்று ( மார்ச் 31) தேதி நடைபெறும் பா.ஜ., பார்லிமென்ட் குழு கூடி ஆலோசிக்க உள்ளதாகவும் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
– இந்துஸ்தான் டைம்ஸ்