கூடங்குளம் போராட்டக்காரர்கள் எதிரான 101 வழக்குகள் வாபஸ் பெறப்படாது

koodankulam_udayakumarகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராடும் போராட்டக்காரர்களில், 3 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த பதில் மனுவில் இந்த போராட்டகாரர்கள் மீது பதிவு செய்ப்பட்டுள்ள கிட்டத்தட்ட 349 வழக்குகளில், 248 வழக்குகளை திரும்பப்பெற முடிவுசெய்துள்ளதாகவும் மீதமுள்ள 101 வழக்குகளை திரும்பப்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராடுபவர்களில், புஷ்பராயன், எஸ்.பி.உதயகுமார் மற்றும் எம்.பி.ஜேசுராஜ் ஆகிய மூவர் எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்கள் மீதான வழக்குகளை திருப்பப் பெற வேண்டும் என்று அவர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தொடுத்த வழக்கை இரண்டு நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்றம், இவர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் பதிலை பிரமாணப் பத்திரம் மூலம் தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தது.

அதன் அடிப்படையில் திங்களன்று தமிழக அரசு சார்பில் சமர்பிக்கப்பட்ட பதில் மனுவில், போராட்டகாரர்கள் மீது பதிவு செய்ப்பட்டுள்ள கிட்டதட்ட 349 வழக்குகளில், 248 வழக்குகள் சட்டம் ஒழுங்கு, சாலை மறியல் போன்றவற்றுடன் தொடர்புடையது என்பதால் அதனை தாங்கள் திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரித்துள்ளது.

மீதமுள்ள 101 வழக்குகள், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, கடல் வழி போராட்டங்கள் போன்ற குற்றங்களுக்கு தொடர்புடையது என்பதனாலும், அதனை திரும்ப பெற்றால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீதுள்ள நம்பிக்கை நீங்கிவிடும் என்பதாலும் அந்த வழக்குகளை திரும்பப்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால், தேர்தல் முடியும் வரை அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம் என்று தொடுக்கப்பட்ட கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறது. -BBC

TAGS: