பிரதமராக துடிக்கும் நரேந்திர மோடி, அவரை வீழ்த்த நினைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடப் போவதாக 60 வயது திருநங்கை அறிவித்துள்ளார்.
பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு எல்லாம் தலைவியாக உள்ளவர் கமலா. சமீபத்தில், இவரது தலைமையில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி, மத்தியப் பிரதேசம் பகுதிகளில் இருக்கும் அரவாணிகளின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி போட்டியிடும் வாரனாசி தொகுதியில் தங்களது பிரதிநிதியான கமலாவை சுயேட்சை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, மோடி, கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடப் போவதாக கமலா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமலா கருத்து வெளியிட்டார்.
பெனாரஸ் நகரம் அர்த்தனாரீஸ்வரரான சிவனுக்கு சொந்தமானது. புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் திருநங்கைகளை அர்த்தனாரீஸ்வரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், என்னை ஆதரித்து, வாக்களியுங்கள்.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தலைமை பொறுப்பில் அமர்ந்து ஊழலுக்கு மேல் ஊழலாக வளரச் செய்துள்ளனர்.
திருநங்கையான எனக்கு குடும்பம் கிடையாது. மூன்றாம் பாலினத்தை சேர்ந்த என்னை மக்கள் ஆதரித்தால் வாரிசு முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டை வளப்படுத்துவேன். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் இவ்வளவு காலமாக எங்கள் இனத்தவர்கள் மக்களுக்கு ஆசி வழங்கியுள்ளனர்.
இப்போது, அந்த ஆசிகளை எனக்கு ஓட்டுகளாக மக்கள் திருப்பி செலுத்தும் வேளை வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.