ராஜீவ் கொலை: தூக்கு ரத்து தீர்ப்பு மீளாய்வு மனு தள்ளுபடி

rajiv_assisnationஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகள் மூவரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு தொடுத்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் தேதி அன்று உத்தரவிட்டிருந்தது.

இந்த தண்டனை குறைப்பிற்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.

“உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிப்படையாகவே சட்டத்துக்கு முரணாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 72 இன்படி மரண தண்டனை பெற்றவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத்தலைவருக்கு அளிக்கபட்டுள்ளது. இதே வேளை ஒரு தண்டனையை குறைக்கவோ, மன்னிப்பு அளிக்கவோ அல்லது மாற்று தண்டனை அளிக்கவோ குற்றப்பிரிவியல் சட்டங்கள் 432, 433, 435 மற்றும் 433A ஆகியவையின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசாங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவின் சட்டப்பிரிவு குறித்து முக்கிய கேள்விகளை இந்த வழக்கு எழுப்பியுள்ளதால் இது ஒரு அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்” என்றும் அந்த மறுசீராய்வு மனுவில் வாதிடப்பட்டிருந்தது.

மேலும் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த விதம் சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கருதுமானால் அந்த கருணை மனுக்களை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு தான் மறுபரிசீலனைக்காக அனுப்ப வேண்டுமே தவிர அதில் உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாயன்று அந்த மறுசீராய்வு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த வருடம் முன்னதாக ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அன்று வேறொரு வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளுக்கு , அவர்களது கருணை மனு மீது மத்திய அரசு முடிவெடுக்க காலதாமதம் ஏற்பட்டதையும், அதனால் அந்த குற்றவாளிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கபட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது.

அதையடுத்து, ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று மனு தொடுக்கப்பட்டது.

அது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அப்போது தனது வாதங்களை முன்வைத்த அரசு வழக்குரைஞர், வாகன்வதி, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இது போன்ற கருணை மனுக்கள் மீதான வழக்குகளில் முடிவினை எடுக்க காலதாமதம் ஏற்பட்டதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது, ஆனால் இந்த வழக்கில் இறுதி முடிவினை எடுக்க தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்திற்கு மத்திய அரசால் விளக்கம் அளிக்க இயலும் என்பதால் மரண தண்டனையை ரத்து செய்ய கோருவதை ஏற்க முடியாது என்றார்.

மேலும் அப்போது மற்ற வழக்குகள் போல் இல்லாமல் இது தேசத்திற்கு துரோகம் விளைவிக்க கூடிய பயங்கரவாத செயல் என்பதாலும் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றார் அரசு வழக்குரைஞர், வாகன்வதி. எனினும் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் மூவரின் மரண தண்டனையை குறைத்து உச்ச நீதிமன்றம் அப்போது தீர்ப்பளித்திருந்து. -BBC

TAGS: