உள்ளூர் மக்களின் ஒப்புதலின்றி அணு உலை அமைக்க ஆம் ஆத்மி ஒப்பாது

seasiegekoodankulam2012எந்த ஒரு பெரிய திட்டமும் உள்ளூர் மக்களின் அனுமதியில்லாமல் கொண்டுவரப்படமாட்டாது என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்திருப்பதால், அக்கட்சியில் இணைந்து போட்டியிடுவதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப உதயகுமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன், எம்.பி. ஜேசுராஜன் ஆகியோர் முறையே கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரை கிராமத்திலிருந்தபடியே போராடிவந்த உதயகுமார், வேட்புமனுத்தாக்கல், தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றுக்காக கடந்த சனிக்கிழமையன்று, அந்தக் கிராமத்திலிருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் பிபிசி தமிழோசைக்குப் பிரத்யேகப் பேட்டியளித்த சுப.உதயகுமார், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்பது மக்களுடன் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடும் நிலையில், அணு உலைக்கு எதிரான போராட்டத்தை அக்கட்சி ஏற்கிறதா என்ற கேள்விக்கு, பெரிய மக்கள் திட்டங்களை உள்ளூர் மக்களின் அனுமதியுடன்தான் நிறைவேற்றுவோம் என்று ஆம் ஆத்மி தெரிவித்திருப்பதால், அணு உலை போன்ற பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட முடியாது என்று உதயகுமார் பதிலளித்தார்.

அதேபோல, தமிழகத்தில் தங்களுடன் ஆரம்பத்தில் உடனிருந்து போராடிய கட்சிகள் பிறகு, அணுஉலைக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்ததால், தாங்கள் ஆம் ஆத்மி கட்சியை நாட வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறினார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளிலிருக்கும் மக்கள் இப்போதும் தங்களுடன் இருப்பதால், இந்த மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல், உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் தங்கள் மீதுள்ள 101 வழக்குகளைத் திரும்பப் பெற முடியாது என தமிழக அரசு கூறியிருப்பதை கண்டிப்பதாகவும் இது உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்தார். -BBC

TAGS: