சென்னை: கர்நாடக மாநிலத்தில் வேட்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது போன்று தமிழகத்திலும் பொருத்தப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று வேட்பாளர்களின் வீடு, அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை எளிதாக கண்காணிக்க முடியும் என்றும், கட்சிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களை உடனே தடுக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
கர்நாடகா போன்று தமிழகத்திலும் வேட்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுமா என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தேர்தல் நடைபெறும்போது வேட்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் எல்லா மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 2011ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின்போது கட்சி அலுவலகம் முன் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதால், தமிழகத்தில் வேட்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்றார்.