குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்

narendra_modiநாட்டில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் குடும்ப அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் உள்ள சியாங்கியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி என்பது, தாய் மற்றும் மகனின் கட்சியாகும். சமாஜவாதி கட்சி என்பது தந்தை, மகன் மற்றும் மருமகளின் கட்சியாகும். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி என்பது கணவன் மற்றும் மனைவியின் கட்சியாகும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி என்பது தந்தை மற்றும் மகனின் கட்சியாகும்.

ஜனநாயகத்தில் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் வறுமையின் காரணமாக, தங்களது மகளை திருமணம் செய்து கொடுப்பதற்காக தங்களின் உடல்பாகங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு இறைச்சி விற்பனையை அதிகரிக்க “இளம்சிவப்பு புரட்சி’யை கடைபிடிக்கிறது. இறைச்சியை மானிய விலையில் ஏற்றுமதி செய்கிறது’ என்றார் மோடி.

ஜுமாரிதாலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், “நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க 1.25 கோடி மக்கள் தேவைப்படுவதாக இளவரசர் (ராகுல் காந்தி) தெரிவிக்கிறார். ஆனால் அவரோ ஊழல் கறை படிந்த தலைவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்களா? காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்தவர்கள், தற்போதுதான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர் (மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறை சென்றதை இவ்வாறு மோடி சாடினார்).

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டு வரும் அசோக் சவானும், லாலு பிரசாத்தும்தான் ராகுல் காந்தியின் பாதுகாவலர்களாக உள்ளனர். இதுபோன்ற பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு, நாட்டின் வளங்களை ராகுலால் பாதுகாக்க முடியுமா?

மத்திய அரசு வழங்கும் ஒரு ரூபாயில் 15 பைசாதான், மக்களுக்கு செல்கிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்தார். அது அனைத்தும் “கையின் கைங்கர்யமே’ ஆகும்’ என்றார்.

பிகார் மாநிலம் நவாடாவில் மோடி பேசுகையில், “நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் தன்னிடம் இருப்பதாக இளவரசர் (ராகுல்) தெரிவிக்கிறார். இத்தனை நீண்ட காலத்துக்கு பிறகு தற்போதுதான் அந்த திட்டம் ராகுலின் நினைவுக்கு வந்துள்ளதா? அதனை செயல்படுத்த இன்னும் 600 ஆண்டுகள் ஆகும்.

நாட்டை கடந்த 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்வதற்கு காங்கிரஸை (மக்கள்) அனுமதித்தீர்கள். ஆனால் அவர்கள் நாட்டை சீரழித்து விட்டார்கள். ஆனால் நான் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் பணியாளாக வந்துள்ளேன். எனவே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

லாலு பிரசாத்துக்கும், முலாயம் சிங்குக்கும் யாதவ சமுதாயம் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் இடையே ஆதரவு உள்ளது. ஆனால் அவர்கள் 2 பேரும், விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. ஆனால் நாட்டு மக்களின் வாழக்கைத் தரத்தில் எந்த மாற்றத்தையும் அந்த அரசு கொண்டு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு மோசடி அறிக்கை ஆகும். 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் புதிதாக 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. அதையே 2014 தேர்தல் அறிக்கையிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் தெரிவித்துள்ளது’ என்றார் மோடி.

பக்ஸரில் மோடி பேசுகையில், மக்களவைத் தேர்தல் முடிவு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. நாட்டு மக்கள் அனைவரும் மத்தியில் இருக்கும் அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர். நாட்டை கொள்ளையடித்தவர்களை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் மக்கள் உள்ளனர்.

இன்னும் 7 ஆண்டுகளில் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த நேரத்தில், குடிநீர், மின்சாரம், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகளை கொண்ட வீடுகளை மக்கள் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி கிடைக்க வேண்டும். இது அனைத்தையும் செய்வதற்கு என்னை ஆசிர்வதிக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

TAGS: