ஊழலற்ற இந்தியா: ஆம் ஆத்மி கட்சி உறுதி

ulalஎதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான தமது தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

இன்று மாலை இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழலற்ற இந்தியாவை அமைப்பதே தங்கள் கட்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஊழலுக்கு எதிரான ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் அந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர் அதிகாரத்தில் உள்ளவர் முதல் பியூன் அதிகாரத்தில் உள்ளவர் வரை கொண்டுவரப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தேர்தலில் ஒருவர் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது 25இலிருந்து 21ற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்தியில் குவிந்துள்ள அரசியல் அதிகாரங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய சுவராஜ் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் ஒரு பாலுறவு குற்றமற்றதாக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்திய 49 நாட்களில் ஊழல் குறைந்தது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும், உரிய நேரத்தில் தங்களது பணிகளை முடிக்காத அரசு ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், விசாரணை அறைகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களின் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதன்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். -BBC

TAGS: