செலவுக் கணக்கை குறைத்து காண்பித்தால் பதவி பறிப்பு: தேர்தல் ஆணையர் எச்சரிக்கை

praveen_kumarதேர்தல் பிரசாரத்தின்போது செலவிடப்படும் கணக்குகளை ஆணையத்திடம் குறைத்துக் காண்பித்தால், வெற்றி பெற்ற வேட்பாளரின் பதவி பறிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்ற உமேஷ் யாதவ் என்ற வேட்பாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் தகுதி இழப்புக்கு ஆளான சம்பவத்தை அவர் நினைவுபடுத்தினார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை செலவினப் பார்வையாளர்கள் கணக்கிட்டு வருகிறார்கள். நிழல் கணக்கு என்ற பெயரிலான ரகசிய கணக்கில் வேட்பாளர்களின் அனைத்து செலவுகளும் சேர்க்கப்படும்.

பின்னர் வேட்பாளரிடம் அவரது தேர்தல் செலவுகள் குறித்த கணக்கு கேட்கப்படும். அவர் கொடுக்கும் செலவுக் கணக்கு, ரகசியக் கணக்கில் உள்ள தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன் பின்னர் அந்த வேட்பாளரின் தேர்தல் செலவு உறுதி செய்யப்படும். இப்படி உறுதி செய்யப்படும் செலவுத் தொகை, வேட்பாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவுத் தொகைக்கு அதிகமாக இருந்தால் அது தேர்தல் விதிமுறை மீறலாகும்.அந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால்கூட, இந்த குற்றத்துக்காக அவரை தகுதி இழப்பு செய்ய முடியும்.

நோட்டா வாக்கு: ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளின் மொத்த எண்ணிக்கையில், ஆறில் ஒரு பகுதி எண்ணிக்கைக்கு மேல் வாக்குகளை வாங்கும் வேட்பாளர்களுக்குத்தான் டெபாசிட் கிடைக்கும். ஒருவேளை பல முனைப் போட்டியில் யாரும் ஆறில் ஒரு பங்கை பெறமுடியாமல் போய்விட்டால், அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மட்டும் டெபாசிட் தொகை திருப்பித் தரப்படும். பதிவான செல்லத்தக்க ஓட்டுகளில், நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் சேர்க்கப்படாது என்றார் பிரவீண்குமார்.

TAGS: