புதுடெல்லி, ஏப்.6- தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில்நுட்பத்தை கையாள பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதன்படி, 7 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
அதாவது, 3டி ஹாலோ கிராபிக் மூலம் ஒரு ‘செட்’ அமைத்து அதில் மோடி முன்கூட்டியே பொதுக் கூட்டத்தில் பேசுவது போன்று பேசி பதிவு செய்யப்படும். இதனை ஒலி-ஒளி யுடன் 3டி ப்ரொஜெக்டர் மூலம் 45 டிகிரி அளவில் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடை மீது ஒளிபரப்பினால் ஒரே நேரத்தில் அதிகமான இடங்களில் மோடி நேரடியாக மக்கள் முன் தோன்றி பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்போது முப்பரிமாண முறையில் மோடி மேடை மீது தோன்றுவார். இதனை 3டி கண்ணாடி இல்லாமலே பார்க்க முடியும்.
மோடியின் 3டி பிரசாரத்தை டெல்லி முழுவதும் 15 இடங்களில் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி மோடியின் பிரசாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதே நாளில் 3டி தொழில்நுட்பம் வாயிலாக அவர் நாடு முழுவதும் பேச இருப்பதால் டெல்லி பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பா.ஜ.க பிரசார குழு தலைவர் விஜய் குமார் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோடி மேற்கொண்ட பிரசாரத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.