பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: அத்வானி

advani_nomination“சிறந்த நிர்வாகியான நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர்’ என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டினார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றபோது அத்வானி இவ்வாறு பாராட்டினார். மேலும் மோடியுடன் சென்று தனது வேட்பு மனுவை அத்வானி தாக்கல் செய்தார். இதன்மூலம், பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த சர்óச்சைக்கு அத்வானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு காந்திநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அத்வானியும், மோடியும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அத்வானி பேசுகையில், “”மோடியை எனது சீடர் என்று நான் அழைக்க மாட்டேன். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் அவர் மிகுந்த ஆற்றல் படைத்தவர்.

அந்தத் திறன்தான் குஜராத் மாநிலத்தில் நல்லாட்சியை வழங்க அவருக்கு உதவியுள்ளது. தற்போது பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பொருத்தமான பொறுப்பை கட்சி அவரிடம் அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பில் இருந்தபோதும் அவர் இதேபோல்தான் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி பிரதமர் பதவியை வகிப்பார். பிரதமர் பதவிக்கு அவர் தகுதி வாய்ந்தவர்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயுடன், மோடியை நான் ஒப்பிடமாட்டேன். வாஜ்பாய் அலாதியானவர். பாஜகவின் முன்னோடியான தீனதயாள் உபாத்யாய வகுத்தளித்த அரசியல் கொள்கைகளை ஆட்சிப் பொறுப்பில் செயல்படுத்தியவர் வாஜ்பாய்.

போபால் தொகுதியிலும் நான் போட்டியிட வேண்டும் என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் விரும்பினார்கள். ஆனால், காந்திநகரில் போட்டியிடுவதில் இருந்து மாற வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இங்கு போட்டியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார் அத்வானி.

அத்வானியை ஆதரித்து கூட்டத்தில் பேசிய மோடி, “நாட்டுக்காக பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ள அத்வானியின் அரசியல் வாழ்க்கை சிறப்பானது. அவர் காந்திநகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கட்சித் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்” என்று மோடி கோரிக்கை வைத்தார்.

மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து போட்டியிடுவதற்காக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி (86) சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, மாநில பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் அத்வானி தாக்கல் செய்தார்.

அப்போது, அத்வானி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவரது வேட்பு மனு தொடர்பான மற்ற ஆவணங்களை தேர்தல் அதிகாரியிடம் மோடி வழங்கினார். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு காந்திநகர் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இருவருக்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

“எந்த மாநிலத்திலும் 10 இடங்களில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது’

நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்க எண்ணான, பத்து தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

காந்திநகரில் போட்டியிடும் அத்வானிக்கு ஆதரவாக சனிக்கிழமை வாக்கு சேகரித்து மோடி பேசுகையில், “நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் இந்த மக்களவைத் தேர்தலும் அமையும்.

இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தோல்வியை விட பெரும் தோல்வி இந்தத் தேர்தலில் கிடைக்கும்.

எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்க எண்ணில் வெற்றி பெறாது. எந்த மாநிலத்திலும் 10 தொகுதிகள் கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது. இந்தத் தேர்தலின் முடிவை மக்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டனர்’ என்றார்.

அத்வானிக்கு ரூ. 7 கோடி சொத்து

தனக்கும், தன் மனைவிக்கும் சேர்த்து ரூ. 7 கோடி மதிப்புடைய சொத்து உள்ளது என்று அத்வானி தெரிவித்துள்ளார். இது கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலின்போது அளிக்கப்பட்ட சொத்து மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ள சொத்து மதிப்பீடு குறித்த உறுதிமொழிப் பத்திரத்தில் அத்வானி குறிப்பிட்டுள்ளதாவது:

“சொந்தமாக வாகனம் இல்லை. குர்கானில் 2 வீடுகளும், காந்திநகரில் ஒரு வீடும் உள்ளன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ. 5.57 கோடியாகும். வங்கியில் எனது பெயரில் ரூ. 97.23 லட்சமும், எனது மனைவியின் பெயரில் ரூ. 67.13 லட்சமும் ரொக்க இருப்பு உள்ளது. இருவருக்கும் சொந்தமாக ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் உள்ளன. எனது ஆண்டு வருமானம் ரூ. 29.70 லட்சம்’ என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

TAGS: