புதுடில்லி: “”தேவயானி விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் வரை, அமெரிக்காவை தொடர்ந்து வற்புறுத்துவோம்,” என, வெளியுறவு செயலர், சுஜாதா சிங் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி, “விசா’ மோசடி செய்தார் என தெரிவித்து, அமெரிக்க போலீசாரால், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சாதாரண குற்றவாளிகள் போல் நடத்தப்பட்ட அவரிடம், ஆடைகளை களைந்தும், அமெரிக்க போலீசார் சோதனையிட்டனர். இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில், விரிசல் விழுந்தது.
பின், 1.5 கோடி ரூபாய் ஜாமினில் தேவயானி விடுவிக்கப்பட்டார். அவர் மீதான முதல் குற்றச்சாட்டை அமெரிக்க கோர்ட் தள்ளுபடி செ ய்தது. ஆனாலும் விசா மோசடி தொடர்பாக, இரண்டாவது வழக்கை அமெரிக்க அரசு பதிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள தேவயானி, அமெரிக்கா சென்றால் கைது செய்யப்படும் நிலை உள்ளது. இது, மத்திய அரசுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, மத்திய வெளியறவு செயலர், சுஜாதா சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில், தேவயானிக்கு உள்ள சட்ட பிரச்னை முடிந்து விட்டதாக, மத்திய அரசு கருதவில்லை; அந்த பிரச்னை நீடிக்கிறது. இந்த பிரச்னைக்கு அமெரிக்க அரசு சுமுக தீர்வு காணும் என்ற நம்பிக்கையுள்ளது. சுமுக தீர்வு ஏற்படும் வரை, அமெரிக்காவிடம் இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஆனால், அது எந்த மாதிரியான வலியுறுத்தல் என்பது பற்றி, தற்போது விளக்கமாக கூற முடியாது. இவ்வாறு, அவர் கூறினார். தேவயானி மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஆகாஷ் சிங் ரத்தோர் என்பவரை மணந்துள்ளார்; இவர்களுக்கு, கைக்குழந்தை உள்ளது.