பாஜக தேர்தல் அறிக்கை: சோனியா ஆவேசம்

soniaபாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் “வகுப்புவாத செயல் திட்டம்’ என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அதனால் நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பேசுகையில், “பாஜக வெளியிட்டுள்ள “வகுப்புவாத செயல் திட்டத்தால்’ நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, நாட்டின் ஒற்றுமையைப் பேணிக் காக்க முடியும்’ என்றார்.

Soniaஹிந்துக்களின் வாக்குகளை கவரும் வகையில், தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்த ஆலோசனை, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை பாஜகவின் உண்மையான கொள்கைகளைக் காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

“பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வெறும் கோஷங்களே’ என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை, அதன் உண்மையான கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளது. ராமர் கோயில் கட்டுவது, 370-வது சட்டப் பிரிவை நீக்குவது குறித்த ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்கள் மக்களை பிளவுபடுத்தக் கூடியவை என்று ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதற்கு மாறாக, பொது சிவில் சட்டம், 370-வது சட்டப்பிரிவை நீக்குவது, ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன’ என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.

“பாஜகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடமில்லை. பெரு நிறுவனங்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் வகையிலேயே தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது’ என்று சமாஜவாதி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

“பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரங்களை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது’ என்று விஎச்பி அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்துள்ளார்.

TAGS: