பிரதமரானால் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்: நரேந்திர மோடி

  • (கோப்புப் படம்)
    (கோப்புப் படம்)

“நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால், சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்’ என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட மோடி கூறியதாவது:

எனது கட்சி எனக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை அளித்துள்ளது. நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால், “மக்களுக்காக கடினமாக உழைப்பது, தனக்காக எதுவும் செய்து கொள்ளாமல் இருப்பது மற்றும் தீய நோக்குடன் செயல்படாமல் இருப்பது’ என 3 உறுதி மொழிகளை அளிக்க விரும்புகிறேன். மத்தியில் வலிமையான அரசுடன் சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியே எனது பிரதான நோக்கம். நாட்டின் தற்போதைய நிலைமையை சரி செய்யும் வகையிலும், நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

வறுமையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதே அரசின் பிரதான நோக்கமாகும். எனது நிர்வாகம் அவ்வாறே இருக்கும். குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

எங்களைப் பொருத்தவரை, தேர்தல் அறிக்கை என்பது வெறும் தேர்தல் சடங்கு அல்ல. அது, எங்களின் பாதை, இலக்கு மற்றும் உறுதியான செயல் ஆகியவற்றை வெளிக்காட்டக் கூடியது.

பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். மத்தியில் வலுவான அரசு இருந்தால், எந்த நாடும் நம்மை அச்சுறுத்த முடியாது. அதேசமயம், பிற நாடுகளையும் நாங்கள் அச்சுறுத்த மாட்டோம். மாறாக அவர்களுடன் இணைந்து செயல்படும் வல்லமை பாஜகவுக்கு உண்டு என்று மோடி தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்: தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: எங்களது தேர்தல் அறிக்கை, எங்களது வாக்குறுதி. பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரஸ், தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை பாதி நிறைவேற்றியிருந்தாலே, சர்வதேச அளவில் நம் நாடு வலுவடைந்திருக்கும். பிரதமர் பதவி வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டபோது, பல்வேறு அரசியல் கட்சிகள் அதனை விமர்சனம் செய்தன. சுதந்திர இந்தியாவில் மோடியைப் போல வேறு எந்தத் தலைவரும் அரசியல் ரீதியில் இந்த அளவுக்கு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

சுஷ்மா ஸ்வராஜ்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், “நாட்டின் வளர்ச்சி தடைபட்டுள்ள நிலையில், எங்களது தேர்தல் அறிக்கை மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அன்னிய முதலீட்டை நம்பியிருக்கும் காங்கிரஸ் அரசைப் போல் அல்லாமல், உள்நாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தி சொந்தக் காலில் தேசத்தை நிறுத்தவே பாஜக விரும்புகிறது’ என்றார்.

TAGS: