காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் நாடு ஆபத்தை சந்திக்கும்: ஏ.கே.அந்தோணி

 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் அது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாஜக தேர்தல் அறிக்கை வண்ண காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட வகுப்புவாத செயல்திட்டங்களே தவிர, வேறொன்றுமில்லை. அதிலுள்ள திட்டங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அவ்வாறு செய்வது நாட்டுக்கு ஆபத்தை விளைப்பதுடன், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு உதவியாக அமைந்துவிடும்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தற்போது நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் முடிவுகளை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அங்கு இந்தியாவுக்கு எதிரான அரசு ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகள் அதிக பிரச்னைகளை சந்திக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

2004 மற்றும் 2009ஆம் ஆண்டில் காங்கிரஸூக்கு எதிராக போட்டியிட்ட மதவாத சக்திகளே தற்போது மீண்டும் போட்டியிடுகின்றன. எனவே தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு அமையும்.

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.

TAGS: