பாஜக கூட்டணி வென்றால் நதிநீர் பிரச்னைகள் தீரும்: வைகோ

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து நதிநீர் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த வைகோ, நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக, திமுக இல்லாத ஒரு தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மோகன் ராஜூலு ஆகியோர் ஆவர்.

இந்தக் கூட்டணி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலையும் தாண்டி நீடிக்கும். இந்தக்  கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் பரம்பியாறு, நெய்யாறு, பாலாறு, காவிரி நதிநீர் பிரச்னைகளையும், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையையும் தீர்க்க முடியும்; இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், இனப் படுகொலையைத் தடுக்கவும் முடியும்.

அரசியலில் அடிப்படை நாகரிகம் தெரியாத கட்சி அதிமுக. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே பிரசாரத்தை தொடங்கியவர் ஜெயலலிதா. மோடி எனது நண்பர் என்று கூறிய கருணாநிதி, அதன்பின் அவர் தமிழகத்துக்கு வர முடியாது என்று கூறுகிறார்.

கருணாநிதி கடிதம் எழுதவில்லை: 1989-ல் முதல்வராக இருந்த கருணாநிதி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறி, அந்தக் கடிதத்தை பத்திரிகைகளுக்கு தந்தார்.

ஆனால், அப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதவே இல்லை. தொடர்ச்சியாக எனது குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய நாளில் கடிதம் எழுதியதுபோல, ஒரு போலிக் கடிதத்தை தயாரித்துவிட்டார். 1989-ல் அந்தக் கடிதத்தை எழுதியதாகக் கூறிய நாளில் அவர் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அவரிடம் நேரில் கோரிக்கை விடுக்காமல், கடிதம் எழுதியதாகக் கூறியது மோசடி வேலை என்றார் வைகோ.

TAGS: