பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கில் போடுவதா?: முலாயம்

 “பாலியல் பலாத்கார குற்றத்துக்கு இளைஞர்களை தூக்கில் போடுவது தவறு’ என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

மும்பை சக்தி மில் வளாக பாலியல் பலாத்கார வழக்கில் மூன்று இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தவறு செய்வது இயல்பான ஒன்றுதான். அதற்காக அவர்களை தூக்கில் போடுவது நியாயமில்லை.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வழி செய்யும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எவரும் தவறாகப் பயன்படுத்த முடியாத வகையில் அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும். காதலில் முறிவு நேரும்போது, ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் பொய்யாக சுமத்தி வருகிறார்கள் என்றார்.

கண்டனம்: பாலியல் பலாத்காரம் குறித்த முலாயம் சிங் யாதவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பெண்ணுரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

TAGS: