காவிரி: கர்நாடகத்தின் புதிய பணிகளுக்கு தடை கோருகிறது தமிழகம்

kaveriகர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய திட்டங்களை நிறைவேற்ற திட்டப்பணிகள் மேற்கொள்வதை தடை செய்யக் கோரி தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு தரப்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வெள்ளிகிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் பல்வேறு நவீன திட்டப்பணிகளை மேற்கொள்வதாக குற்றம் கூறியுள்ளது.

குறிப்பாக ராமசுவாமி கால்வாய், ராம்புரா கால்வாய், விஸ்வெஸ்வரையா கால்வாய், மற்றும் கபினி கால்வாய் உள்ளிட்ட சிக்கனந்தி திட்டங்கள் போன்றவற்றிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை முறைப்படுத்தும் வரை இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடியும் வரை கர்நாடக மாநிலத்தில் புதிய திட்டப்பணிகளை செயல்படுத்தும் காவிரி நீரவாரி நிகாம் லிமிடெட் நிறுவனம் அதன் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டியுள்ளது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தால் விடுக்கப்பட்ட குத்தகை பணிகளை தடுத்து நிறுத்துவதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கர்நாடக மாநில அரசு எடுத்து கூற வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய தடுப்பணைகளளை கட்டி வருவதாக கூறி, அதனால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் சிறிதளவு நீர் கூட கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகும் என்றும், எனவே தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: