முதல்வர் பதவியில் இருந்து விலகியது தவறு: கேஜரிவால் ஒப்புதல்

முதல்வர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு தவறானது என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனினும், சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாத காரணத்தால் ஆட்சியை 49 நாள்களில் ராஜிநாமா செய்தார். இது தில்லி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது இச் செயலை காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை கேஜிரிவால் கூறியதாவது:

தவறான நேரத்தில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். கொள்கையில் இருந்து தவறிவிட்டதாக மக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். எனினும், பெரும்பான்மையானவர்கள், எங்கள் கட்சி எதற்காக ராஜிநாமா செய்தது என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

ஆம்ஆத்மி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தேன். அதை நிறைவேற்ற முடியாததால்தான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ராஜிநாமா செய்வதற்கு முன்னதாக மக்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

திட்டங்களை நிறைவேற்ற முடியாததால்தான் ராஜிநாமா செய்ததாக எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் பொய் பிரசாரம் மேற்கொண்டுள்ளன. எனினும், ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாததற்கு காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும்தான் காரணம் என்ற உண்மையையும் மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம்ஆத்மி களம் இறங்கியுள்ளது. இதில் அமேதி, வாராணசியில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாஜக 180-க்கும் குறைவான இடங்களில்தான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்றார் கேஜரிவால்.

TAGS: