தஞ்சாவூர்: “அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் இருந்து, ஓட்டு சிதறி, பா.ஜ.,வுக்கு போய் சேரும்,” என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார். தஞ்சையில், அவர் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில், ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 25 சதவீத ஓட்டு, தி.மு.க., ஓட்டு வங்கியாக உள்ளது. இந்த ஓட்டு, தி.மு.க.,வை தவிர வேறு கூட்டணிக்கோ, கட்சிகளுக்கோ விழாது. அதேசமயத்தில், அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் இருந்து ஓட்டு சிதறி, பா.ஜ.,வுக்கு போய் சேரும். இதன்மூலம் அ.தி.மு.க., மேலும் பலவீனம் அடையும். தி.மு.க., பலம் அடையும். இதுதவிர, மொத்த ஓட்டு வங்கியில், இஸ்லாமியர், 55 லட்சம் பேர் அதாவது, 10 சதவீதம் உள்ளனர். இவர்கள் ஓட்டும், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும்.
லோக்சபாவில், கூட்டணியை முடிவு செய்து விட்டு, பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், சாதாரண மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணிக்கு முன், பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தால், தற்போதைய கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க.,- ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்காது என்பது என் கருத்து.
பா.ஜ., தேர்தல் அறிக்கையால், இஸ்லாமியர் ஓட்டு, 100 சதவீதம், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சேதுசமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றில், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இரு கட்சியும் ஒரு நாணயத்தின், இரு பக்கங்கள். வேறு, வேறு அல்ல. லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்.