திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கை வருமாறு:
இந்தியாவின் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் (அண்மையில் தனது 99 வயதில் மறைந்தவர்) 2002-இல் மோடி ஆளும் குஜராத்தில் நடைபெற்ற திட்டமிட்ட இஸ்லாமியச் சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்கிய இன அழிப்புப்பற்றி (Pogram) மிகுந்த வேதனையோடு ஒரு சிறு நூலே ‘The End of India’ என்று எழுதி வெளியிட்டார்.
குஷ்வந்த்சிங் கூறுகிறார்
அதில் “மோடி திட்டமிட்டே அந்தக் கலவரங்களின் போது காவல்துறை அதிகாரிகள் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தினை அடக்க முயற்சிக்காமல், கண்டும் காணாதது போல் இருக்கச் சொல்லி சுமார் 2000 பேர்களுக்கு மேல் இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட கொடுமை!
இனி, மோடி போன்றவர்கள் பதவியில் நீடித்தால் “இந்தியா என்ற ஒரு நாடு இருக்காது; மாறாக சிதறுண்டு போகும்” என்று எச்சரிக்கை விடுத்தார்!
ஆர்.எஸ்.எஸ். தீவிரம்!
இவர் பிரதமர் என்றால் நாடு தாங்குமா? எதிர்காலம் இருண்ட காலமாகத்தான் அமையும். இந்தக் கவலை மோடியைக் காட்டி, ஆட்சியைப் பிடித்து தங்களது வழக்குகளை வாபஸ் பெறுமாறு செய்ய வேண்டியது அவசரம் என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ். காவித் தீவிரவாதம் முனைப்புடன் செயல்படத் துவங்கி விட்டது.
அதற்காக ஆங்காங்கே மாநிலங்களில் ‘அலை’ என்றுகூறி வலை வீசி, சிக்கியவர்களைக் கொண்டு சீட்டணி (கூட்டணி அல்ல) அமைத்து போட்டியிடுகின்றனர்.
பார்ப்பனர் மற்றும் கார்ப்பரேட் சக்திகளின் பின்னணி
பார்ப்பன ஏடுகளும் – ஊடகங்களும் பன்னாட்டு முதலாளித்துவ திமிங்கலங்களான முகேஷ் அம்பானி, டாடா, அடானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வந்து விட்டால் தாங்கள் இந்தியாவையே பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, ‘விலைக்கே’ வாங்கி விட முடியும் என்ற பேராசையால் உந்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்ட முனைப்புடன் செயலாற்றுகின்றனர்!
முன் நடந்தவை – மதக் கலவரங்களை 1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 கோத்ரா கலவரம் பின் ஏற்பட்ட சிறுபான்மையினர் அழிப்புப்பற்றி அறவே அறியாத 18 வயது நிரம்பியதால் வாக்குரிமை பெற்ற வாக்காளர்களான இளைஞர்களிடம், காங்கிரஸ் அதிருப்தி, ஊழல் என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு, அவர்கள் கையில் உள்ள வாக்கினை “வளர்ச்சி, வேலை வாய்ப்பு” என்ற மயக்க பிஸ்கட்டுகள் மூலம் ஏமாற்ற, இணையதளம் மற்றும் அய்டெக் (High Tech) தொழில் நுட்பமூலம் ஆவேசமாய் முனைப்புடன் செயல்படுகின்றனர், பணத்தையும் பஞ்சமில்லாமல் செலவழிக்கின்றனர்!
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பதவிப் பசி தேடிகளும், பார்ப்பன ஊடகவியலாளர்களும், மோடியைத் தூக்கிப் பிடித்து, அவர் ஏதோ ஒரு ‘சர்வரோக நிவாரண சஞ்சீவி’ போல காட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற முனைப்புடன் உள்ளனர்!
ஆதரவின் உண்மை நிலை என்ன?
மேற்கு வங்க மம்தா பானர்ஜியிடமோ, ஒரிசா நவீன் பட்நாயக் இடமோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, திரிபுரா போன்ற சிறு மாநிலங்களிலோ, காஷ்மீரிலோ வேறு பல தென்னாட்டு மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திராவிலோ (நாயுடுவிடம் தூண்டில்) அவர்களுக்கு அடித்தளமே இல்லை. தமிழ்நாட்டில் தங்கள் இடத்தை ஆறாகக் குறைத்து நிற்கும் பரிதாபமே! இந்த மாநிலங்களில் எல்லாம் பிஜேபிக்கு எந்தப் பலமும் கிடையாது.
எப்படியிருந்தாலும் பத்திரிகை பலம், பணபலம், இன பலம் முதலியவைகளைக் கொண்டு முடிந்த வரை மாய வலைப் பிரச்சாரத்தினை நடத்த முயலுகின்றனர்.
ஆளுக்கொரு வேடம், நாளுக்கொரு பேச்சு- இவைகளைக் கைவந்த கலையாக இந்த அணி மேற்கொண்டு, அதிமுகவுடன் ரகசிய ஒப்பந்தமும் பாதுகாப்புடன் செய்து கொண்டுள்ளது; அதன் காரணமாக அம்மையாரின் அனல் கக்கும் பேச்சு, இவர்களை எதிர்க்கும் அந்த பா.ஜ.க. அணி பக்கம் பாய்வதே கிடையாது.
அறிவு ஜீவிகளின் அறிவிப்பு!
மோடி கைகளில் இரத்தக் கறையுடனே வருகிறார் என்கிறார் மம்தா.
அதே போல உ.பி.யின் மாயாவதி, ஒரிசாவின் நவீன் பட்நாயக் பீகாரின் நித்தீஷ்குமார் போன்றவர்கள் மட்டுமல்லாது.
இந்தியாவின் அறிவு ஜீவிகள் 12 பேர்கள் வெளி நாட்டில் – இங்கிலாந்தில் உள்ளவர்கள் – அங்கே மோடி பற்றி எழுதிய பிரபல ஆங்கில நாளேடான “கார்டியன்” பத்திரிகைக்கு கையப்பம் இட்டு கூட்டு அறிக்கை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல எழுத்தாளரான
1. சல்மான் குர்ஷித்,
2. ஹார்வர்டு பேராசிரியர் வோமி பாபா.
3. உலகப் புகழ் வாய்ந்த சிற்பி அனிஷ்கபூர்
4. பிரபல சினிமா இயக்குநர் தீபா மேத்தா போன்றவர்கள் இதில் அடக்கம்!
இந்தியாவின் பன்முகத் தன்மை, பன்மத, பல கலாச்சார, பல மொழிகள், உலவும் நிலைக்கு ஆபத்து வரும் என்று எச்சரித்துள்ளனர்!
பதவிக்காக எதிர் காலத்தையே அடகு வைக்கலாமா?
இதைப்பறறிக் கவலைப்படாமல், மதக் கலவரங்களுக்கும், முழு முதலாளித்துவ கார்ப்பரேட் கலாச்சாரப் புயலுக்கும் கதவு திறக்க, சில பதவிகள், சீட்டுகளுக்காக இப்படி நாட்டின் எதிர்காலத்தையே அடகு வைத்து விடலாமா? என்று கூட்டுச் சேர்ந்த கொள்கைச் சோரவாதிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!
ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையின் பேரில்தான் தேர்தல் அறிக்கையே தயாரிக்கப்பட்டதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்ததற்குப் பிறகும் பிஜேபியை ஆதரிப்போம் என்று சொன்னால் அப்படிச் சொல் பவர்களுக்கு வாழ் நாள் முழுவதுமே மன்னிப்புக் கிடைக்குமா? மக்கள் மத்தியில் மிகச் சிறுமையாக தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்ளலாமா?
நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலை உள்ள மனிதநேயர்களே, நீங்கள் சிந்தித்து இவர்களை வர விடாமல் தடுக்க முன் வருக!
எனவேதான், யார் வர வேண்டுமென்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை வலியுறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
மீறி, கொள்ளிக் கட்டையை எடுத்துத் தான் தலையைச் சொறிந்து கொள்வோம் என்றால் அது உங்கள் விருப்பம் நண்பர்களே!
மீண்டும் கருணாநிதி வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்று
சொல்லாமல் சொல்கிறார்.