‘தமிழகக் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி யோசிக்க நேரம் இல்லை’ – மோடி

rajani_kanth_modi”தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் எப்படி அழிப்பது என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்பட இவர்களுக்கு நேரமில்லை” என பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தோன்றியுள்ள இந்த மூன்றாவது கூட்டணியைப் பார்த்து இந்த இரண்டு கட்சிகளும் பயந்து போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஏற்கனவே திருச்சி, சென்னை என 2 முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்து சென்றுள்ளார். தற்போது தமிழகத்தில் பிரச்சாரம் உச்சகட்டதை அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் மீண்டும் பிரச்சாரம் மேற்கொண்டார் மோடி. சென்னை – மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாநிலங்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் தனது உரையில் மோடி குறிப்பிட்டார். தற்போது மத்தியில் இருக்கும் ஆட்சி பிராந்திய அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் மாநிலங்களை அடிமைகளைப் போல நடத்துகிறது என்றும் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். தான் நான்கு முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன் என்றும் மத்திய அரசு மாநிலங்களை எப்போதுமே அடிமைகளாகத்தான் நடத்தியது என்றும் மோடி குறிப்பிட்டார்.

மாநில பிரச்சனைகளை அணுகும் விதம்

அதேபோல மாநிலங்களின் பிரச்சனைகளைத் தான் அணுகவிருக்கும் விதம் குறித்தும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். அதாவது, மாநிலங்களை தொகுதியாகப் பிரித்து அவற்றின் பிரச்சனைகளை அணுக வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

”கடலோர மாநிலங்களின் பிரச்சனைகள் ஒரே மாதிரியானவை; அதேபோல,வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனைகள் ஒரே மாதிரியானவை, குஜராத் – ராஜஸ்தான் மாநிலங்களின் பிரச்சனைகள் ஒரே மாதிரியானவை – ஆகவே அவற்றை ஒரே தொகுதியாக அணுகி பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்” என்று மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி மீதும் கடுமையான தாக்குதல் தொடுத்தார் மோடி. காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் தேர்தலில் நிற்காமல் ஓடிவிட்டதாக அவர் தெரிவித்தார். அவர்கள் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்ப்பது போல ஏழைகளிந் வீட்டைப் பார்ப்பதாக, சுற்றுலாவாகப் பார்ப்பதாக மோடி தெரிவித்தார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி மக்களின் ஆசைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார். தங்களுடைய கூட்டணி இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் புதிய எதிர்காலத்தைப் படைக்கும் என்று மோடி தெரிவித்தார்.

அதிமுக மற்றும் திமுக மீதும் விமர்சனம்

தனது உரையில் காங்கிரஸ் மீது மட்டுமல்லாமல், முதன் முறையாக அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் தாக்குதல் தொடுத்தார் மோடி. தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே மாற்றி மாற்றி ஆட்சிக்கு வருகின்றன. அவை ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது மற்றொரு கட்சியை அழிக்க நினைக்கின்றன என்று குற்றம்சாட்டினார் அவர். அவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படவோ, சிந்திக்கவோ இல்லை என மோடி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் தோன்றியுள்ள தங்களுடைய அணியைப் பார்த்து இரண்டு கட்சிகளுமே பயந்து போயுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

அதேபோல, இலங்கை, மலேசியா தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தனது அரசு முக்கியத்துவம் கொடுத்துத் தீர்க்கும் என்று மோடி தெரிவித்தார். இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைவிட முன்னேறிச் செல்வது மட்டுமில்லாமல், நம்மை அச்சுறுத்தவும் செய்கின்றன என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் சரிசெய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்

இன்று சென்னையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 6 மணியளவில் சென்னை வந்து சேர்ந்த நரேந்திர மோடி, முதலில் போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. நான் மருத்துவமனையில் இருந்த போது என்னை அவர் சந்தித்தார். நான் இங்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். மோடி தலைசிறந்த நிர்வாகி… தலைவர்.. நரேந்திர மோடி என்னை சந்திக்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அவர் என் நலம் விரும்பி. நான் அவருடைய நலம் விரும்பி. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையின் 3 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் நரேந்திர மோடி, மீண்டும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். -BBC

TAGS: