இலங்கையிலும் நரேந்திர மோடி அலை- மோடியுடன் இலங்கை அரசாங்கம் பேச்சு

narendra_modiஇந்தியப் பொதுத் தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அலை இலங்கையிலும் வீசி வருகிறது.

இதற்கு காரணம் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் வைகோ போன்றவர்களின் ஆதரவு கிடைத்தமையால் ஆகும்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையுடன் இருக்கும் உறவில் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை.

எனவே எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்வு கூறப்படாத நிலையில், எந்தக்கட்சிக்கு ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் இலங்கை அரசாங்கம் உறவைப் பேணத் தயார் என்று அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமது கருத்தில், பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் நிலை மாறுமா? என்பதை எதிர்ப்பார்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர் சார்பு கொள்கையை பின்பற்றும் என்று சிலர் கூறுகின்றனர். எனினும் ஏனையோர் அந்தக்கட்சி இலங்கை அரசாங்கத்துடன் நட்பு ரீதியாகவே நடந்து கொள்ளும் என்று கூறுகின்றனர்.

எனவே எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று தாம் நம்பவில்லை என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்தில், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் நிகழப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

எனவே பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை விடயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும், தமிழகத்தின்பால் இருந்து வலிமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுமாயின் அது முக்கிய கருவியாக அமையும் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இலங்கை விடயத்தில் உரிய தீர்மானத்தை எடுக்காத நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதாக்கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தமிழர் விடயத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானதாக அமையும். எனவே இலங்கைக்கு இது பாதகமாகவே அமையும் என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேர்தல் தரப்பு தகவல்களின்படி பாரதீய ஜனதாக்கட்சியே ஆட்சிக்கு வரும் என்று எதிர்வு கூறப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இந்து அடையாளத்தை கொண்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கைகள் அது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கையிலேயே தங்கியிருக்கும் என்று ஹெல உறுமயின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதாக்கட்சி சீன எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருப்பதால் அமெரிக்காவுடனும் மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்தே செயற்படும். எனவே மேற்கத்தைய நாடுகளில் சிலவற்றில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முனைப்புக்கள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயலலிதாவின் உதவியின்றி பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சி நிறுவப்படுமாக இருந்தால் அந்த அரசாங்கம் இலங்கையுடன் நல்லுறவை பேணும் என்றும் வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக்கட்சி இலங்கையுடன் கொண்டுள்ள உறவில் இலங்கையின் இனப்பிரச்சினை, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் மீள்பரிசீலனை செய்ய வேண்டியும் அதிக அழுத்தங்களை சந்திக்க வேண்டியும் இருக்கும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரை தமிழர் விடயத்திலும் மனித உரிமைகள் விடயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

இந்தநிலையில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியுடன் இலங்கை பேச்சு

இலங்கை அரசாங்கம், இந்தியாவின் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி அடுத்த இந்திய பிரதமராகலாம் என்ற எதிர்விலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்திய பொதுத் தேர்தல் நடப்புக்களை இலங்கை அவதானமாக அவதானித்து வருவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் அமெரிக்க யோசனையின் போது இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காக் கொள்கையை கடைப்பிடித்தது. எனினும் இந்தவிடயத்தில் நரேந்திரமோடி மாற்றுக் கருத்தை கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் அவருடன் பேச்சு நடத்தப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: