மோடி நினைப்பது வெற்றியடைய வேண்டும்: ரஜினி

modi_rajini_meeting_001நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள், அவர் நினைப்பது வெற்றியடைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், நண்பர் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவே அவரைச் சந்தித்தேன் என்றும் மோடி கூறியிருந்தார்.

வழக்கமாக குர்த்தா-பைஜமாவில் வரும் மோடி, நேற்று தமிழர் மரபு உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்.

ரஜினி தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா அனைவரையும் அறிமுகப்படுத்த, மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு குறித்துப் பேசிய ரஜினி, நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். நான் மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இருந்த போதே என்னைப் பார்க்க வந்தவர் மோடி.

அவரை நான்தான் என் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்திருந்தேன், மோடி சிறந்த தலைவர், நிர்வாகியும் ஆவார், அவர் நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

பலன் கொடுக்குமா ரஜினி, மோடி சந்திப்பு?

மூப்பனார் முதல் மு.க. அழகிரி வரை எத்தனையோ அரசியல்வாதிகள் ஆதரவு கேட்டு ரஜினி வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆதரித்தாலும், மௌனம் சாதித்தாலும் அவர்கள் அனைவருக்கும் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் சம்பிரதாயமான வரவேற்பும், வழியனுப்புதலும் வழங்கப்படும்.

ஆனால், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியைச் சந்தித்தபோது இந்த சம்பிரதாயங்களை முதல் முறையாக ரஜினி மீறியுள்ளார். கோச்சடையான் படம் விரைவில் வெளியாக உள்ளதால் ரஜினி மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊடகங்களுக்கு முன்னிலையில் உற்சாகமாக மோடியை கட்டியணைத்தவாறு பேட்டி அளித்தார் ரஜினி.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிய ஒரு வாரமே எஞ்சியிருக்கும் நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினியை அவரது வீடு தேடிச்  சென்று சந்தித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் ரஜினி பரபரப்பை ஏற்படுத்துவது இது புதிதல்ல. 1996 தேர்தலில் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (தமாகா) தொடங்க ரஜினியே காரணம். 1996, 1998 தேர்தல்களில் திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவு அளித்த ரஜினி, 2004 தேர்தலில் பாமகவை தோற்கடியுங்கள் என்றார்.

அதன் பிறகு யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஒதுங்கியிருந்த ரஜினியை மோடி சந்தித்துள்ளார். கடந்த 2011 மே 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த மோடி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு அவரது உடல் நலம் குறித்து அடிக்கடி மோடி விசாரித்து வந்துள்ளார். அடிக்கடி பேசும் அளவுக்கு அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் வெற்றிபெற என்ன செய்யலாம் எனக்கேட்ட மோடியிடம், ரஜினிகாந்த் ஆதரவு அளித்தால் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை மனதில் வைத்துக் கொண்ட மோடி, ரஜினி சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதனை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “மோடி எனது நெருங்கிய நண்பர். அவரின் எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகிறேன்’ என்றார். மேலும் வலிமையான தலைவர், நிர்வாகத் திறமை மிக்கவர் என்றும் புகழ்ந்துரைத்தார்.

இது பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ரஜினி – மோடி சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பேசியதற்கும் ரஜினி – மோடி சந்திப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மோடி சென்னை வந்துவிட்டதால் அவரது பிரசாரத் திட்டத்தில் சென்னை இடம்பெறவில்லை. ரஜினியைச் சந்திப்பது உறுதியானதும் திடீரென பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மீனம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் மோடி பேசி முடித்ததும், மோடி குறித்து ரஜினி பேசியதை மேடையிலேயே வாசித்தார் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

மோடி – ரஜினி சந்திப்பு தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கை கொடுக்குமா? என்பது குறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, “நேரடி அரசியலில்  இல்லாவிட்டாலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர் ரஜினி. எனவே அவரை மோடி சந்தித்திருப்பது பாஜக அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மோடி குறித்து பத்திரிகையாளர்களிடம் ரஜினி கூறி ஒவ்வொரு வார்த்தையும் சக்தி வாய்ந்தவை. இன்றைய செய்தித் தாள்கள் அனைத்திலும் இந்தச் சந்திப்பு தான் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இதுவே எங்களுக்கான பிரசாரம்தான். இதன் மூலம் ரஜினி ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன’ என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் ராயல் ராஜிடம் கேட்டபோது, மருத்துவமனையில் ரஜினியை சந்தித்ததால் மோடி மீது எங்களுக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. நட்பு ரீதியான ஒரு சந்திப்பாகவே நாங்கள் பார்க்கிறோம். ரஜினி உத்தரவிட்டால் மோடிக்காக நாங்கள் பிரசாரம் செய்வோம். தேர்தல் குறித்து ரஜினியிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.

இந்தத் தேர்தலில் ரஜினியை மோடி சந்தித்திருப்பது பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி – மோடி இணைந்து நிற்கும் படங்களுடன், மோடி குறித்து ரஜினி கூறிய கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பாஜகவினர் விநியோகிக்கத் தொடங்கிவிட்டனர்.

விஜயகாந்துடன் கூட்டணி; ரஜினிகாந்தின் ஆதரவு; மோடியின் செல்வாக்கு – இந்த மூன்று அம்சங்களும் பாஜக அணி போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுத் தராமல் போனாலும், பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை எட்டிப்பிடிக்க உதவும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

TAGS: