அம்பேத்கரை அவமதிக்கிறார் ராகுல்: மோடி தாக்கு

தலித்துகளின் நலன்களுக்கான சட்டங்களை நிறைவேற்றியது காங்கிரஸ்தான் என்று தெரிவித்து, சட்ட மேதை அம்பேத்கரை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பேத்கரின் 125வது பிறந்த தினத்தையொட்டி, குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மோடி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் பேசும்போது, தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் நலனுக்கான சட்டங்களை நிறைவேற்றியது காங்கிரஸ்தான் என்று ராகுல் காந்தி தெரிவித்ததை கடுமையாக விமர்சித்தார். மோடி மேலும் பேசியதாவது:

தனது வாழ்நாள் முழுவதையும் தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் பாடுபட்டார். நமது நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அவர் உருவாக்கித் தந்தார். ஆனால் தலித்துகளின் கடவுள் போன்ற அவரை மத்தியில் அமைந்த காங்கிரஸ் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு உரிமைகள் கிடைக்க அம்பேத்கர் வழிவகை செய்தார். அதனை செயல்படுத்த விடாமல் நேரு – காந்தி குடும்பத்தினர் தடுத்தனர். ஆனால் தற்போது அந்த உரிமைகளை வழங்கியது தாங்கள்தான் என்றும், அவர்களின் நலன்களுக்கான சட்டங்களை நிறைவேற்றியது தாங்கள்தான் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர் (தலித்துகளுக்கு உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்கான சட்டங்களை நிறைவேற்றியது காங்கிரஸ் கட்சிதான் என்று ராகுல் காந்தி தெரிவித்ததை இவ்வாறு மோடி தாக்கிப் பேசினார்).

அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கூட அரசியல் காரணத்துக்காக இந்த விவகாரத்தில் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன்மூலம் அம்பேத்கரை அவர்கள் அவமதிக்கின்றனர்.

அம்பேத்கர் இல்லையென்றால், என்னைப் போன்றவர்கள் யாரும் தற்போது உங்கள் (மக்கள்) முன்னிலையில் வந்திருக்க முடியாது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத் தகவல்கள், அந்த மாநிலத்தில் வாரத்துக்கு 13 தலித்துகள் கொல்லப்படுவதாகவும், 6 பேர் கடத்திச் செல்லப்படுவதாகவும், 21 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், 5 வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வதற்கு, அந்த மாநிலத்தில் அமைந்த காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகளே காரணம் ஆகும்.

பிரதமருக்கு இருந்த பேச்சு சுதந்திரத்தை பறித்துச் சென்றது யார்! என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தெரிவிக்க வேண்டும். மன்மோகன் சிங்கின் வாயில், எந்த வகையான பூட்டு மாட்டப்பட்டுள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்றார் மோடி.

 

“”அம்பேத்கரை நேரு அதிகம் வெறுத்தார்”

அம்பேத்கரை முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மிகவும் வெறுத்ததாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காந்திநகரில் திங்கள்கிழமை அவர் பேசுகையில், “புத்தர் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை வாங்கக்கூட ஜவாஹர்லால் நேரு மறுத்து விட்டார். நாட்டின் முதல் பிரதமரான நேரு, அம்பேத்கரை மிகவும் வெறுத்தார். அம்பேத்கர் மீது நேரு அதிக துவேஷம் கொண்டிருந்தார்.

அம்பேத்கரை எந்த அளவு அதிகமாக அவமதிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மத்தியில் அமைந்த காங்கிரஸ் அரசுகள் அவமதிப்பு செய்தன. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கூட அவர்கள் வழங்கவில்லை. 3 பேருக்கு, அவர்களின் மரணத்துக்கு பிறகு உடனடியாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் உருவப்படத்தைக் கூட காங்கிரஸ் வைக்கவில்லை.

மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டது’ என்றார்.

TAGS: