விருதுநகரில் களம் காணும் வைகோ வெற்றிக்கனியைப் பறிப்பாரா?

ykoமறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோ போட்டியிடும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

கடந்த முறை வெற்றி வாய்ப்பை சுமார் பதினாறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்ட வைகோ, இந்த முறை பா.ஜ.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியின் நட்சத்திர பிரச்சாரகராக இருந்தாலும், தான் போட்டியிடும் தொகுதியின் சின்னஞ்சிறு கிராமங்களிலும் சென்று பிரச்சாரம் செய்கிறார். மதுவின் தீமை, இதற்கு முன்பு தொகுதிக்கு தான் செய்த நன்மைகள் போன்றவற்றைப் பட்டியலிடுகிறார் வைகோ.

1998லிருந்து 2009ஆம் ஆண்டுவரை ம.தி.மு.க வசம் இருந்த தொகுதி . அக்கட்சியின் தலைவரான வைகோ இங்கே இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் வெற்றி பெற்றார்.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற மாணிக்கம் தாகூர் இந்த முறை தனித்து நிற்பதே பலம் என்கிறார்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்த தொகுதி இது. இப்போது தனித்து நிற்கும் அ.தி.மு.க. ராதாகிருஷ்ணனைக் களமிறக்கியிருக்கிறது. 1972லிருந்து கட்சியில் இருப்பவர் என்பதால் கட்சிக்குள் நன்றாக அறிமுகமானவர் என்றாலும், தொகுதிக்குள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். வேட்பாளர் முன்பாகவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், சுமார் 40 நாட்களுக்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது அ.தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கிறது. தே.மு.தி.கவின் அதிருப்தி எம்.எல்.ஏவான பாண்டியராஜனும் ராதாகிருஷ்ணனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இரட்டை இலை இங்கு களமிறங்கியிருப்பதே பெரிய பலம் என்கிறார் அவர்.

திமுக வேட்பாளர் ரத்னவேலுவின் பிரச்சாரம்

தி.மு.கவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டியிடும் தொகுதி இது. வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தொழிலதிபரான ரத்னவேலு கட்சியினரிடம் பெரிய பரிச்சயம் இல்லாதவர் என்பது தி.மு.கவிற்கு பலவீனம்தான். ஆனால், தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு போன்றவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள். என்னதான் வைகோ நட்சத்திர வேட்பாளர் என்றாலும் தன்னால் அவரை வெல்ல முடியும் என்கிறார் ரத்னவேலு.

பட்டாசுத் தொழில் பிரச்சினைகள்

தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு சிக்கலாக உருவெடுத்திருக்கிறது சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள். புதிய கட்டுப்பாடுகளும் உரிமக் கட்டண உயர்வும் பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்களையும் தொழிலாளர்களையும் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பட்டாசுகளை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும் என்கிறார்கள் இவர்கள். இந்தப் பிரச்சனையை முன்வைத்து, செவ்வாய்க் கிழமையன்று சிவகாசியில் முழு அடைப்பும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்ட்டன.

அனைத்துக் கட்சித் தலைவர்களுமே வந்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்துச் சென்றிருக்கிறார்கள். இருந்தபோதும், இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாவிட்டால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவரான செல்வராஜ். இந்தப் போராட்டத்தின் போது எல்லாக் கட்சி வேட்பாளர்களுமே உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுதான் உரிமக் கட்டணங்களை உயர்த்தியது என்பதால், தற்போதைய எம்பியும் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூருக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள்தான் குழப்புகின்றன என்கிறார் மாணிக்கம் தாகூர். சீனப் பட்டாசுகள் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுவிட்டன என்றும் உரிமக் கட்டணங்களைப் பொறுத்தவரை பிரதமரிடம் பேசி தான் குறைத்தபோதும், தேர்தல் காலத்தில் இம்மாதிரி அறிவிப்புகளைச் செய்யக்கூடாது என்று கூறி மீண்டும் உயர்த்தியது எதிர்க்கட்சிகள்தான் என்கிறார் அவர்.,

தற்போதைய எம்பியான மாணிக்கம் தாகூர் மீது தொகுதிக்குள் பெரிய அதிருப்தி இல்லை என்றாலும், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதால் அக்கட்சிக்கு எதிரான அலை இவருக்கு பாதகமாக இருக்கிறது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் இதுவரை கட்டப்படாதது குறித்த அதிருப்தியும் அந்நகரில் இருக்கிறது. இருந்தபோதும் தனது தீவிரப் பிரச்சாரத்தின் மூலம் அதை ஈடுகட்டிவருகிறார் மாணிக்கம் தாகூர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் தொழிலாளர்களின் வாக்குகளைக் கணிசமாகப் பெறக்கூடும். இங்கிருக்கும் மக்களைப் பொறுத்தவரை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் முக்கியமான பிரச்சனைகளாக இருக்கின்றன.

தொகுதிப் பின்னணி

விருதுநகர் ஒரு வகையில் வித்தியாசமான தொகுதி. இரண்டு வெவ்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்ட, இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது.

தொழிற்சாலைகள் நிறைந்த விருதுநகர் மாவட்டத்திலிருந்து சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் , மதுரை மாவட்டத்திலிருந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் இந்த மக்களவைத் தொகுதிக்குள் இடம்பெற்றுள்ளன.

எண்ணெய் வித்துக்கள், பட்டாசு, ஆஃப்செட் அச்சு, சிமெண்ட் என தொழிற்சாலைகள் நிரம்பிய இத்தொகுதியில் சுமார் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். முக்குலத்தோர், நாடார், நாயக்கர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தத் தொகுதியில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது

விவசாயம், தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி, இரண்டு மாவட்டங்களில் பரந்திருக்கும் தொகுதி, ஐந்து முனைப் போட்டியைச் சந்திக்கும் தொகுதி, நட்சத்திர வேட்பாளரான வைகோ போட்டியிடுவது என ஒரு வித்தியாசமான களமாக இருக்கிறது விருதுநகர்.

தற்போதைய நிலையில், அ.தி.மு.க. – தி.மு.க., ம.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில்தான் யுத்தம் களைகட்டியிருக்கிறது. -BBC

TAGS: