இந்திய ராணுவத்தை விசாரிக்க கோரும் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இந்திய உச்சநீதிமன்றம்இந்திய உச்சநீதிமன்றம்

 

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இந்திய ராணுவம் ஆற்றிய பங்கு குறித்து விசாரிக்கக் கோரி தொடுக்கப்பட்ட பொது நலன் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தின் போது இலங்கை ராணுவத்துக்கு துணையாக இந்திய ராணுவம் அக்களத்தில் செயல்பட்டதாக குற்றம் கூறியும், இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள சிறப்பு விசாரணை மன்றம் ஒன்றை அமைக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி பொது நலன் மனு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்சங்கர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமையன்று, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா மற்றும் குரியன் ஜோசப் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் பிரபாகரன், பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற இது போன்ற ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினார்.

ஆனால் அவரது வாதத்தையும் கோரிக்கையை ஏற்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இது இந்திய அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், நீதிமன்றம் நேரடியாக இதில் தலையீட முடியாது என்றும், தேவைப்பட்டால் மனுதாரர் இது தொடர்பான நேரடி அதிகாரம் கொண்ட சம்பந்தப்பட்ட இந்திய அரசுத்துறையிடம் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலே இலங்கைக்கு அனுப்பப்பட்டது”

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு துணையாகக் களத்தில் செயற்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரான ராம் சங்கர், அப்படி நடந்திருந்தால், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய அப்படியான நடவடிக்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் புகார் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து இராணுவத்தை செயற்படுத்த இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாகக் தெரிவித்திருந்தார் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இந்திய இராணுவ ஆய்வாளரான கர்னல் ஹரிஹரன். அதேசமயம், அத்தகைய இந்திய இராணுவ செயற்பாடுகள் குறித்து பின்னர் இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இந்திய இராணுவத்தினர் இலங்கயின் போர்க்களத்தில் இலங்கைப் படையினருக்கு உதவி வழங்கியதாகக் கூறுவதை, அந்தப்போர் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மறுத்திருக்கிறார். -BBC

TAGS: