இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுக்கு வருகிறது.
இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தென் சென்னைத் தொகுதியிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ராமநாதபுரத்திலும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வேலூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலிதா 37 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, கடந்த மூன்று நாட்களாக சென்னையின் மூன்று தொகுதிகளில் இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று தென் சென்னைத் தொகுதியில் அவரது பிரச்சாரம் நடந்தது.
2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
குஜராத்தைவிட தமிழ்நாடு நன்கு வளர்ச்சியடைந்த மாநிலம் என்று குறிப்பிட்டு பல்வேறு புள்ளி விவரங்களையும் ஜெயலலிதா முன்வைத்தார்.
இந்தப் புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்ட பின்னர், கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இப்போது சொல்லுங்கள், சிறந்த நிர்வாகி யார், மோடியா, இல்லை இந்த லேடியா?” என்று கேள்வியெழுப்பினார் ஜெயலலிதா.
ராகுல் காந்தி, அத்வானி பிரச்சாரம்
இதேவேளை, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழக மீனவர்கள் நலனில் காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது என்றும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி பேசினார்.
அதேபோல, குஜராத்தைவிட தமிழகம் மேம்பட்ட மாநிலம் என்றும் மோடி இங்கு வந்து பார்க்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் காங்கிரஸ் தமிழகத்தில் புதிய எழுச்சி பெறும் என்று தான் நம்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்றும் தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி தான் முதன்மைக் கூட்டணி என்றும் அத்வானி தனது உரையில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியும் மன்மோகன் சிங்கும் வரும் மே மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள் என்றும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியே அமையும் என்றும் அத்வானி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள், எவ்வளவு அடித்தாலும் வலிக்காது..
யார் சிறந்த நிர்வாகி? ‘மோடி’யா அல்லது இந்த ‘லேடியா’ என்றா கேட்டீர்? சாட்சாத் அந்த ‘தாடி’யேதான்(மோடி).
ஒரு ரூபா சம்பளம் வாங்கிய காலத்திலேயே வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தவர் இந்த லேடி! மோடியைப் ‘போடி’ ன்னாலும் ‘போடா’ ன்னாலும் லேடியின் நிர்வாகத் திறன் மோடிக்கு வராது!
யார் சிறந்த ஊழல் பெருச்சாளி என்றல்லவா கேட்டிருக்கவேண்டும்.!
லேடிக்கு மோடியைப் பிடிக்காது; மோடிக்கு லேடியைப் பிடிக்காது.
கோடி மக்களின் கணிப்பு இது. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.