2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலம் மே 5-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்தார். அப்போது, ஏற்கெனவே அறிவித்தது போல இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ராசா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரமேஷ் குப்தா, “எனது கட்சிக்காரர் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆகவே, அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை. மேலும், 1,718 கேள்விகள் சுமார் 824 பக்கங்களுக்கு உள்ளன. அவற்றைப் படித்துப் பார்த்து வாக்குமூலம் அளிக்க குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.
இதேபோல, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வாலும் வாக்குமூலம் பதிவு செய்ய தனது கட்சிக்காரருக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரினார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சைனி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் ஆவணங்கள், வாக்குமூலம் தொடர்புடைய கேள்விகளைப் படித்துப் பார்க்க எனக்கு நான்கு மாதங்கள் ஆகின. உங்களுக்கும் அதுபோல அவகாசம் தேவைப்படும். ஆகவேதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் அவகாசத்துக்கான உங்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது.
கால அவகாசம் தருவதற்கு எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அதற்கு மேலும் நீங்கள் கூடுதல் அவகாசம் கோரக் கூடாது. எனவே, மே 5-ஆம் தேதி மூலம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி அளிக்கிறேன். வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதால், தேவையற்ற தாமதத்தை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-ஆவது விதியின்படி சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகளை எழுப்பவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இதில் வழக்குரைஞர்கள் தலையீடு இருக்காது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரும்பியவற்றை நீதிபதியிடம் கூறலாம். இது அவர்களுக்கும் நீதிபதிக்கும் இடையிலான விசாரணை நடவடிக்கையாகும். அவர்களிடம் கேள்விகளை நீதிபதி என்ற முறையில் நான் கேட்பேன். எனவே, மே 5 முதல் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சைனி குறிப்பிட்டார்.
முன்னதாக, திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி ராசா, கனிமொழி, பல்வா உள்ளிட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி சைனி ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார்.
இந்த வழக்கில் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டீனா அம்பானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், இடைத்தரகர் நீரா ராடியா, அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதி உள்ளிட்ட சிபிஐ சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் நடைமுறையை திங்கள்கிழமை (ஏப்ரல் 21) மேற்கொள்ள சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. இந் நிலையில், வழக்கு வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.