பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று ஜார்க்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் கிரிராஜ்சிங் ‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை’ என்றும் ‘அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்’ என்றும் தெரிவித்த கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, இன்று பொகாரோ மாவட்டத்தின் துணை மண்டல குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அமித் சேகர், கிரிராஜ்சிங்கிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டங்களான 153 A, 295 A மற்றும் 298 ஆகியவையின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தில் பாஜக தலைவர் கிரிராஜ்சிங் தெரிவித்த வெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் தொடர்பில் பொகாரோ காவல் துறையினர் அவர் மீது ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் தியொகர் மாவட்ட காவல் துறையினரும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
சிவசேனா தலைவர் மீதும் வழக்கு
இதற்கிடையில் இதே போல் வெறுப்பை தூண்டும் கருத்தை தெரிவித்ததன் தொடர்பில் சிவசேனா தலைவர் ராம்தாஸ் கதம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை மும்பையில் நடந்த பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் விதமாகப் பேசியதற்காக, சிவசேனா தலைவர் ராம்தாஸ் கதம்க்கு எதிராக மும்பை புறநகர ஆட்சியர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்.
அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153 இன் கீழ், மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 123, 125 ஆகியவையின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம்தாஸ் கதமின் பேச்சு குறித்த அறிக்கையை மும்பை புறநகர ஆட்சியர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
மும்பை, கல்யாண் பகுதியில் கட்சித் தொண்டர்களிடம் ராம்தாஸ் கதம் பேசியபோது, ‘கடந்த 2012 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸாத் மைதானத்தில் 5 லட்சம் முஸ்லிம்கள் கூடியிருந்தனர், அந்த முஸ்லிம்கள் காவல் துறையினரை தாக்கினர், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தனர், பெண் காவல் துறையினருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தனர். மோடி பதவிக்கு வந்தவுடன் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்’ என்று தெரிவித்திருந்தார்.
அந்த பிரச்சாரத்தில் பாஜக வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவும் கலந்து கொண்டிருந்தனர்.
இது ராம்தாஸ் கதமின் தனிப்பட்ட கருத்து, இது கட்சியின் கருத்தல்ல, எங்களுக்கும் இந்தக் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சிவசேனா விலகிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பாஜகவின் நலம் விரும்பிகள் என்று கூறிக்கொள்பவர்களின் பொறுப்பற்ற பேச்சுகளை தான் அங்கீகரிக்கவில்லை என்று பாஜக தலைவர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அவ்வாறு பேசுபவர்கள் அது போன்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் நரேந்திர மோடி கேட்டு கொண்டார். -BBC
மோடி மஸ்தானுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.