மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு விகிதத்துக்கு (72.46 சதவீதம்) ஓரளவு இணையாக இந்த முறையும் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டியிருப்பதால் இது 74 சதவீதம் வரை உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
புதுச்சேரியில் 83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் புதுவையில் 79.70 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் வாக்குப்பதிவு 3 சதவீதம் அதிகமாகும்.
சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 63.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்புடன் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தகவலை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டார்.
தருமபுரிக்கு முதலிடம்-பின்தங்கிய தென் சென்னை: தமிழகத்திலேயே தருமபுரியில் அதிகபட்சமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக தென் சென்னை தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இந்த முறை வாக்குப் பதிவு விகிதம் 5 சதவீதம் குறைந்துள்ளது.
தேர்தலைப் புறக்கணித்த 5 கிராமங்கள்: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரி தமிழகத்தில் உள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த 2,780 வாக்காளர்கள் வாக்குப்பதிவை வியாழக்கிழமை (ஏப்.24) புறக்கணித்தனர். திண்டுக்கல் மாவட்டம் காரியாம்பட்டி, ஈரோடு மாவட்டம் மருதூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம், அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி, அரக்கோணம் உரியூர் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 2,780 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
சென்னை தொகுதிகள் மந்தம்:
சென்னைக்கு உட்பட வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு விகிதம், தமிழகத்தின் பிற தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருந்தது. அதாவது, வட சென்னையில் 64.63 சதவீதம் (2009-ல் 63.5 சதவீதம்), மத்திய சென்னை 60.90 சதவீதம் (2009-ல் 61.13 சதவீதம்), தென் சென்னை 57.86 சதவீதம் (63 சதவீதம்) என வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
ஜெயலலிதா, கருணாநிதி வாக்களிப்பு: முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோபாலபுரம் சாரதா உயர்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர் நிலைப் பள்ளியில் வாக்கைச் செலுத்தினார். குறிப்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடி மையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் காலை 7.05 மணிக்கு வந்து முதல் நபராக வாக்களித்தார்.
கோபாலபுர வாக்குச்சாவடியில் கோளாறு: திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க இருந்த கோபாலபுரம் சாரதா உயர் நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 40 நிமிஷங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது.
இதேபோல், சென்னையில் 20 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 349-க்கும் அதிமான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவை உடனடியாகச் சரி செய்யப்பட்டன. 129 இடங்களில் இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்னென்ன புகார்கள்? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, வாகனங்களை அனுமதிக்கவில்லை, வாக்குச்சீட்டுகளுடன் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படுகிறது போன்ற பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து வந்தன.
புதுக்கோட்டை, சென்னை திருவான்மியூர் ஆகிய இடங்களில் கை விரலை நன்றாக துடைத்துவிட்டு மை வைக்காததால் அவை உடனடியாக அழிந்தது. அதன் பிறகு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு விவரம்
தொகுதி சதவீதம் (சுமார்)
திருவள்ளூர் (தனி) 74.75 %
வட சென்னை 64.63 %
தென் சென்னை 57.86 %
மத்திய சென்னை 60.90 %
ஸ்ரீபெரும்புதூர் 61.19 %
காஞ்சிபுரம் (தனி) 64.08 %
அரக்கோணம் 77.08 %
வேலூர் 72.32 %
கிருஷ்ணகிரி 77.33 %
தருமபுரி 80.99 %
திருவண்ணாமலை 77.05 %
ஆரணி 80.03 %
விழுப்புரம் (தனி) 76.02 %
கள்ளக்குறிச்சி 77.23 %
சேலம் 77.29 %
நாமக்கல் 79.15 %
ஈரோடு 75.61 %
திருப்பூர் 71.26 %
நீலகிரி (தனி) 74.30 %
கோவை 68.94 %
பொள்ளாச்சி 72.84 %
திண்டுக்கல் 78.29 %
கரூர் 79.88 %
திருச்சி 70.43 %
பெரம்பலூர் 80.12 %
கடலூர் 77.60 %
சிதம்பரம் (தனி) 79.85 %
மயிலாடுதுறை 75.40 %
நாகப்பட்டினம் (தனி) 76.69 %
தஞ்சாவூர் 75.02 %
சிவகங்கை 71.47 %
மதுரை 65.46 %
தேனி 72.56 %
விருதுநகர் 72.19 %
ராமநாதபுரம் 68.84 %
தூத்துக்குடி 69.12 %
தென்காசி (தனி) 74.30 %
திருநெல்வேலி 66.59 %
கன்னியாகுமரி 65.15 %
புதுசேரி 82.18 %
ஆலந்தூர் பேரவை 63.98 %