‘டைம்’ பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம்

140307121035_arunachalam_murugananthamஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அவருடன் சேர்ந்து இந்தியாவிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைத் தலைமை தாங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் அரசியல் வாதி’ என்று வர்ணித்து நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

‘நவீன இந்தியாவின் அரசியல்வாதி என்று கூறப்படும் உருவத்திற்கு மாறான அரசியல்வாதி என்றும், பிரபல குடும்பத்திலிருந்து வராத, இந்து மதக் கட்சியிலிருந்து வராத ஒரு தனி நபர்’ என்று வர்ணித்து அர்விந்த கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மனசாட்சி என்று வர்ணித்து இந்திய நாவலாசிரியர் அருந்ததி ராயின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் அத்து மீறல் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், போப் பிரான்சிஸ், ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புடின் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். -BBC

TAGS: