சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை வெளியேற்றுவோம்: நரேந்திர மோடி எச்சரிக்கை

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:

இங்கு திரளாக கூடி இருக்கும் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒன்றை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப் பிறகு, நமது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு தங்களது நாட்டை நோக்கி வெளியேற வேண்டியிருக்கும்.

வாக்கு வங்கியாக கருதி மம்தா பானர்ஜி வங்க தேசத்தினரை வெளியேற்றாமல் விட்டு விட்டார். வங்க தேசத்தினரை மம்தா பானர்ஜி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

பிகாரில் இருந்து இங்கு வரும் மக்களையும், ஒடிஸாவில் இருந்து இங்கு வருவோரையும் விரட்டியடிக்கிறீர்கள். ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை தாராளமாக அனுமதிக்கிறீர்கள். அவர்களை மனமுவந்து வரவேற்கிறீர்கள்.

வாக்கு வங்கி அரசியல் மூலம் மம்தா பானர்ஜி இந்த நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.

இடதுசாரி கட்சிகள் 35 ஆண்டுகள் இந்த மாநிலத்தை சீரழித்ததை விட மம்தா பானர்ஜி 35 மாதங்களில் கூடுதலாக சீரழித்துள்ளார்.

இனி, வாக்கு வங்கி அரசியல் ஒருபோதும் எடுபடாது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் நாட்டின் வளர்ச்சி, நல்லாட்சி குறித்துதான் பேசி வருகிறேன்.

நான் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து பேசும்போதும், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசும்போதும், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பேசும்போதும் எதிர்க்கட்சியினர் பேசும் ஒரே வார்த்தை மதச்சார்பின்மைதான். அவர்கள் இது தவிர வேறு எதுவும் பேச முடியாது.

தற்போது மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, இடதுசாரி கட்சிகள், மாயாவதி போன்றோர் வாக்குவங்கி அரசியலில்தான் ஈடுபட்டு வருகிறார்கள் என்று

மோடி பேசினார்.

TAGS: